சென்னை,

சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் அடிக்கடி டூ வீலர் மற்றும் கார் ரேஸ் நடப்பதாக புகார்கள் எழுவது உண்டு. கண்மூடித்தனமாக சாலையில் பறக்கும் இந்த வாகனங்களைக் கண்டு பாதசாரிகளும், இதர வாகன ஓட்டுநர்களும் அலறியடித்து நடுங்குவது வழக்கம்.

இந்த நிலைில், கடந்த சனிக்கிழமை அன்று கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள கானத்தூர் அருகே போக்கு வரத்து காவலர்கள் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக பல கோடி ரூபாய் மதிப்பிலான சொகுசுக் கார்கள் அணி வகுத்தப்படி சீறிப்பாய்ந்து வந்தன. இதனைக் கண்ட காவலர்கள் அந்த வாகனங்களை நிறுத்த முற்பட்டனர். ஆனால் அந்த கார்கள் நிற்கவில்லை. அது மட்டுமல்ல… கானத்தூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் சவுந்தரபாண்டி என்பவரது காலில் ஏறி பறந்துவிட்டன. இதில் சவுந்தர பாண்டிக்கு காலில் பலத்த காயம்.

பிறகு, நாலாபுறமும் தகவல் பறக்க… உத்தண்டி சுங்கச்சாவடியில் கார்களை மடக்கி பிடித்தனர் காவல்துறை யினர். ஆனாலும் சில கார்கள் தப்பித்து விட்டனர. 9 கார்கள் மட்டும் பிடிபட்டன. அங்கேயே கார்கள் நிறுத்தி வைக்கப்பட… கார் உரிமையாளர்களை வரவழைத்து விசாரித்தனர் காவல்துறையினர்.

பிறகு 10 பேர் மீது வழக்கு போடப்பட்டு அவர்களில் 9 பேர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். ஒருவர் மட்டும் போலீஸ்காரர் மீது காரை ஏற்றியதற்காக கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவில் அதே ஈ.சி.ஆர் சாலையில் சிலர் கார் ரேஸில் ஈடுபட்டி ருக்கிறார்கள். காவல்துறையினர் தடுத்து விசாரிக்க.. எல்லாரும் பெரிய இடத்துப் பிள்ளைகள் என்பது தெரிய வந்திருக்கிறது. பிறகு என்ன… டாட்டா காட்டி அனுப்பிவிட்டார்களாம்!

நேர்மையான காவல்துறை அதிகாரிகள், இதைச் சொல்லி புலம்புகிறார்கள்…

https://www.youtube.com/watch?v=GAP-t1EJpyo&feature=youtu.be