காரை திருட்டு கொடுத்தவருக்கு அபராதம் கட்ட சொல்லி ரசீது..

டெல்லி ஹரிநகர் பகுதியில் வசிக்கும் லோகேஷ் என்பவர் கடந்த மாதம் தனது உறவினர் ஒருவரைப் பார்க்க விவேக் விஹார் என்ற இடத்துக்குச் சென்றிருந்தார்.
அங்குள்ள போலீஸ் நிலையம் பின் பக்கம் காரை நிறுத்தி விட்டுப் போனவர், திரும்பி வந்து பார்த்த போது காரை காணவில்லை.
அந்த காவல் நிலையத்தில் புகார் அளித்து விட்டு, நல்ல பதிலுக்குக் காத்திருந்தார்.
3 வாரங்கள் கழித்து, போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் இருந்து அவருக்குச் செய்தி வந்திருந்தது.
என்ன செய்தி ?
இரு நாட்களுக்கு முன்னர் மில்லியனம் பணிமனை ஏரியாவில் லோகேஷ், தனது காரை வேகமாக ஓட்டிச்சென்றதாகக் கூறி, அவரது காரின் புகைப்படத்துடன் கூடிய அபராத ரசீதை அனுப்பி இருந்தது போலீஸ்.
காணாமல் போன காரை வேகமாக ஓட்டிச்சென்றதாகக் குறிப்பிட்டு வந்த ரசீது, லோகேஷுக்கு, ஆத்திரத்தை ஏற்படுத்தினாலும், மகிழ்ச்சியையும், தந்தது.
ஏன்?
திருடிய தனது காரை , சுக்குநூறாக பிரித்து ,காயலான் கடையில் எடை போட்டு விற்றிருப்பார்கள் என நினைத்த லோகேஷுக்கு, தனது கார், நல்ல நிலையில் உள்ளது என்பது தான் அவரது மகிழ்ச்சிக்குக் காரணம்.
மீண்டும் அதே போலீஸ் நிலையத்தை அணுகி விவரம் தெரிவித்துள்ள லோகேஷ், காணாமல் போன கார் திரும்பவும் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையை இன்னும் இழக்கவில்லை.
-பா.பாரதி