சிம்லா

ண்ணீர் பற்றாக்குறையினால் சிம்லா நகரில் உள்ள வாகனங்களை கழுவ இமாசலப் பிரதேச உயர்நீதிமன்றம் தடை  விதித்துள்ளது.

இமாசலப் பிரதேச தலைநகரான சிம்லாவில் தற்போது தண்ணீர் பற்றாக்குறை அதிகமாக உள்ளது.  தற்போது கோடைக் காலம் என்பதால் சிம்லாவுக்கு சுற்றுலாப் பயணிகளும் நிறைய வருகின்றனர்.  சிம்லா நகரின் மக்கள் தொகை சுமார் 1.72 லட்சம் ஆகும்.   அது தவிர தற்போது பருவ காலம் என்பதால்  சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் வருகை தந்துள்ளனர்.

வரும் ஜுன் மாதம்1 முதல் 5 வரை இங்கு மலர் கண்காட்சி நடைபெற உள்ளதால் சுற்றுலாப் பயணிகளின் வருகை மேலும்  அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.    இதை ஒட்டி நகர மக்கள் மேலும் துயருறுவார்கள் என அஞ்சப்படுகிறது.    தண்ணீரை சிக்கனமாக செலவழிக்க உத்தரவிடக் கோரி ஆர்வலர்கள் தொடுத்த வழக்கு இமாசல பிரதேச உயர்நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டது.

அப்போது உயர்நீதிமன்றம், “சிம்லா நகரில் தற்போது தண்ணீர் பஞ்சம் கடுமையாக உள்ளதால்  கார் உள்ளிட்ட எந்த வாகனத்தையும் கழுவுவது தடை செய்யப்பட்டுள்ளது.   மேலும் தனிப்பட்ட மக்களுக்கு குறிப்பாக பிரமுகர்கள் வசிக்கும் இடங்களுக்கு தண்ணீர் லாரி மூலம் தண்ணீர் அளிப்பது நிறுத்தப் பட உள்ளது.   இதில் நீதிபதிகள், அமைச்சர்கள், உயர் அதிகாரிகள்,  காவல்துறையினர்,  வர்த்தக மையங்கள் ஆகியவை அடங்கும்” என  உத்தரவிட்டுள்ளது.