சாத்னா,  மத்தியப் பிரதேசம்

த்தியப் பிரதேச மாநிலத்தில் சாதனா என்னும் இடத்தில் கிறித்துவப் பாடல் குழுவினரின் வாகனம் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்துமஸ் சமயத்தில் கிறித்துவர்கள் குழுவாகச் சென்று பாடல்கள் இசைப்பது வழக்கம்.     இது கிறித்துவர் வீடுகளிலும்,  தேவாலயங்களிலும்,  கிறித்துவர்கள் அதிகம் வசிக்கும் தெருவிலும் நடைபெறுவது வழக்கம்.    மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள சாதனா என்னும் பகுதியில் உள்ள ஒரு தெருவில் 30 பேர் கொண்ட ஒரு கிறித்துவப் பாடல் குழுவினர் பாடிக் கொண்டிருந்தனர்.

அவர்கள்  போலீசாரால் அழைத்துச் செல்லப்பட்டு காவலில் வைக்கப்பட்டனர்.    மணிக்கணக்காகியும் அவர்கள் விடுவிக்கப்படவில்லை.   இது குறித்து  எட்டு பாதிரியார்கள் காவல் நிலையம் வந்து விசாரித்துள்ளனர்,   அவர்களிடம் காவல்துறையினர் இந்தப் பாடல் குழுவினர் மதமாற்றப் பிரசாரம் செய்ததாக பஜ்ரங் தள் அமைப்பினர் புகார் அளித்ததாக கூறி உள்ளனர்.    அந்தப் பாடல் குழுவில் இரு பாதிரியார்களும் இருந்ததால் போலீசாருக்கும் அந்த சந்தேகம் ஏற்பட்டதாகக் கூறி உள்ளனர்.

விசாரிக்க வந்த பாதிரியார்கள் வந்த வாகனம் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.   உடனடியாக அங்கு விரைந்த போலீசார் தீயை அணைத்தனர்.   அடையாளம் தெரியாத நபர்களால் கார் எரிக்கப்பட்டதாக வழக்கு பதியப்பட்டுள்ளது.    வாகன எரிப்பு நிகழ்த்தியவர்கள் பஜ்ரங் தள் அமைப்பை சார்ந்தவர்கள் எனத் தெரிய வந்துள்ளது.   நடு இரவு வரை காவலில் வைக்கப்பட்ட பாடல் குழுவினர் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

பாடல் குழுவினர் மத்தியப் பிரதேசம்  சாத்னா வில் உள்ள செயிண்ட் எஃப்ரேம் கிறுத்துவக் கல்லூரியை   சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.