நெல்லை:

ரசு அதிகாரத்தை எதிர்த்து தொடர்ந்து வரைவேன் என்று கார்டூனிஸ்ட் பாலா தெரிவித்துள்ளார்.

கந்து வட்டிக் கொடுமையால் பாதிக்கப்பட்ட நெல்லையைச் சேர்ந்த இசக்கிமுத்து என்பவர் கடந்த அக்டோபர் 23-ம் தேதி நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனது குடும்பத்துடன் தீக்குளித்தார். இதில் இசக்கிமுத்து, அவருடைய மனைவி சுப்புலட்சுமி, குழந்தைகள் மதி சரண்யா, அட்சயா ஆகியோர் உயிரிழந்தனர். இது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் ,  ‘லைன்ஸ் மீடியா ‘என்னும் இணையதளம் நடத்திவரும் கார்ட்டூனிஸ்ட் பாலா, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நெல்லை மாவட்ட ஆட்சியர், நெல்லை காவல் ஆணையர் ஆகியோரை விமர்சித்து கேலிச்சித்திரம் ஒன்றை வரைந்து அதை பதிவிட்டிருந்தார். அதில் ஆட்சியர், ஆணையர், முதல்வர் ஆகியோர் கிட்டதட்ட நிர்வாணமாக சித்தரிக்கப்பட்டிருந்தனர்.

இதையடுத்து, நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்ட்டூனிஸ்ட் பாலா மீது நெல்லை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்தப் புகாரின் பேரில் சென்னை வந்த நெல்லை காவல்துறையினர் கார்ட்டூனிஸ்ட் பாலாவை கைதுசெய்தனர். மாறுவேடத்தில் வந்த  நான்கு காவலர்கள் சென்னை கோவூரில் உள்ள கார்ட்டூனிஸ்ட் பாலாவின் வீட்டில் இருந்து அவரை கைதுசெய்து வலுக்கட்டாயமாக  இழுத்துச் சென்றதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் அவர் இன்று நெல்லை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

முன்னதாக செய்தியாளர்களிடம் பாலா பேச முயன்றார். அதை காவலர்கள் தடுத்தனர். அப்போது பாலா காவலர்களிடம், “நான் கொலைக் குற்றம் ஏதும் செய்யவில்லை. சில தகவல்களைப் பகிரந்துகொள்கிறேன். அவ்வளவுதான்” என்றார்.

பிறகு செய்தியாளர்களிடம், “அந்த கார்டூன் வரைந்ததால் நான் எந்த வகையிலும் வருத்தப்படவில்லை. அந்த கார்டூனை வரைந்தது உண்மைதான். அரசு நிர்வாகம் செயல் இழந்து போனதால், அம்மணமாக வரைந்தேன்” என்றார்.

அப்போது செய்தியாளர் ஒருவர், “தொடர்ந்து வரைவீர்களா” என்று கேட்டார்.

அதற்கு பாலா, “கண்டிப்பாக வரைவேன். இதைவிட அதிகமாக வரைவேன். மோடியில் ஆரம்பித்து எடப்பாடி வரைக்கும் நான் கார்டூன் வரைவேன்” என்று பதில் அளித்தார்.