சென்னை:

டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக செயல்பட இடைக்காலத் தடை கேட்டு தொடரப்பட்ட மனுவை மதுரை உயர்நீதி மன்றம் நிராகரித்து உள்ளது.

குட்கா வழக்கில் தமிழக டிஜிபி ராஜேந்திரன் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், ஓய்வு பெற்ற அவருக்கு மீண்டும் பதவி வழங்கியதை எதிர்த்து உயர்நீதி மன்றம் மதுரை கிளையில் கடந்த ஆண்டு வழக்கு தொடரப்பட்டது.

டிஜிபி ராஜேந்திரன் பணி நியமனத்தை சட்டவிரோதம் என அறிவிக்க கோரி மதுரை உயர்நீதி மன்றத்தில் கதிரேசன் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசரணையை தொடர்ந்து, டிஜிபி ராஜேந்திரனுக்கு பதவி நீட்டிப்பு குறித்து மத்திய, மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தது.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக செயல்பட இடைக்காலத் தடை கோரிய மனு தாக்கல் செய்யப்பட்டது.  அந்த மனுவை நிராகரித்த நீதிமன்றம்,  பிரதான வழக்கில் தலைமைச் செயலாளர், டி.ஜி.பி. ஆகியோர் ஜன.29க்குள் பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

அன்றைய தினமே (ஜன.29ம் தேதி)  உரிய விசாரணை நடத்தி, அன்றே தீர்ப்பு வழங்கப்படும் – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அறிவித்து உள்ளது.