கார்டூனிஸ்ட் பாலாவின் கேலிசித்திரத்தை முகநூலில் பகிர்ந்தவர்கள் மீதும் வழக்கு?

கார்டூனிஸ்ட் பாலா வைரைந்த கேலிசித்திரத்தை முகநூல் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் பதிந்தவர்கள் மீதும் காவல்துறை வழக்கு பதியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கந்து வட்டி கொடுமையால்,   திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பமே  தீக்குளித்து பலியானது தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இது குறித்து பலரும் கடும் கண்டனம் தெரிவித்து சமூகவலைதளங்களில் பதிவிட்டனர். இந்த நிலையில் இது குறித்து கார்டூனிஸ்ட் பாலா, கேலி சித்திரம் ஒன்றை வரைந்தார். இதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர், திருநெல்லவேலி நகர காவல்துறை ஆணையர் ஆகியோரி கிட்டதட்ட நிர்வாணமாக சித்திரித்திருந்தார்.

இந்த கேலி சித்திரம் குறித்து  திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரின் புகாரின் பேரில் பாலாவை காவல்துறையினர் கைது செய்தனர்.

இதைக் கண்டித்து சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் போராட்டம் நடந்தது. அப்போது  பாலாவின் குறிப்பிட்ட கேலிச் சித்திரத்தை பதாகையாக வைக்கப்பட்டது.

அந்த கேலி சித்திரத்தை பதாதையாக வைத்திருந்தது சட்டத்துக்குப் புறம்பான செயல் என்று   கார்ட்டூனிஸ்ட் பாலா, சென்னை பத்திரிகையாளர் மன்ற நிர்வாகிகள் பாரதி தமிழன், அசதுல்லா ஆகியோர் மீது காவல்துறை வழக்கு பதிந்துள்ளது.

இதை ஊடகத்துறையினர், சமூக ஆர்வலர்கள் மற்றும் பல தரப்பினர் கடுமயாக கண்டித்துள்ளனர்.

இந்த நிலையில், “குறிப்பிட்ட அந்த கேலி சித்திரத்தை பதாதையாக வைத்தது  குற்றம் என்றால், அந்த கேலி சித்திரத்தை முகநூல் உட்பட சமூகவலைதளங்களில் பகிர்ந்த பல்லாயிரக்கணக்கானவர்கள் மீதும் காவல்துறை வழக்கு தொடுக்கப்போகிறதா? காவல்துறையின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது” என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள்.