விவசாயிகள் கடன் ரத்து எதிர்த்த வழக்கு! தமிழகஅரசுக்கு உச்சநீதி மன்றம் நோட்டீஸ்

சென்னை:

5 ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகள் கடன் ரத்து செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு பதில் அளிக்க உச்சநீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.

தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடனை தள்ளுபடி செய்து தமிழ்நாடு கூட்டுறவு, உணவு, நுகர்வோர் பாதுகாப்புத்துறை 2016-ம் ஆண்டு ஜூன் 28-ந் தேதி அரசாணை வெளியிட்டது. அதில், 5 ஏக்கருக்கு குறைவான விவசாய நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு மட்டும் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று கூறப்பட்டு இருந்தது.

இதை எதிர்த்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் பி.அய்யாக்கண்ணு பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் தீர்ப்பில், “5 ஏக்கருக்கு குறைவாக விவசாய நிலம் வைத்திருப்பவர்களுக்கு மட்டும் கடன் தள்ளுபடி சலுகை வழங்குவது என்பது இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரான செயல். எனவே, தமிழக அரசு பிறப்பித்த அரசாணையில், 5 ஏக்கருக்கு குறைவான விவசாய நிலம் வைத்திருப்பவர்களுக்கு மட்டும் கடன் தள்ளுபடி சலுகை என்பதை நீக்கிவிட்டு, அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் மற்றும் நகைக்கடன் தள்ளுபடி சலுகை வழங்கப்படும் என்பதை குறிப்பிட்டு, அந்த அரசாணையை மாற்றி அமைக்கவேண்டும் என நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, எம்.வி.முரளிதரன் ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டது.

இதை எதிர்த்து  தமிழக அரசு உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீட்டு மனு  தாக்கல் செய்தது. அந்த மனுவை ஏற்கனவே விசாரித்த உச்சநீதி மன்ற நீதிபதிகள்  மதன் பி.லோகுர், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு மதுரை ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்தது. பின்னர் இந்த வழக்கு உச்சநீதி மன்ற நீதிபதிகள் ஆர்.பானுமதி, ஏ.எஸ்.போபண்ணா ஆகியோர் அமர்வில்  விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கே.எம்.நடராஜ் வாதாடுகையில் கூறியதாவது:-

தமிழகத்தில் சிறு, குறு விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வது என்று தமிழக அரசு எடுத்த கொள்கை முடிவின் அடிப்படையில், ஏற்கனவே ரூ.5,780 கோடி ரூபாய் அளவுக்கு விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளன. மதுரை ஐகோர்ட்டு தீர்ப்பின்படி பெரும் விவசாயிகள் கடனை ரத்து செய்ய வேண்டும் என்றால், தமிழக அரசுக்கு மேலும் ரூ.1,980 கோடி செலவு ஆகும்.

இது தொடர்பாக ஏற்கனவே தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்து உள்ளது. அதையே 2016-ம் ஆண்டு ஜூன் 28-ந் தேதி பிறப்பித்த அரசாணையில் கூறி உள்ளது. அரசின் கொள்கை முடிவில் கோர்ட்டு தலையிட முடியாது என்று பல தீர்ப்புகளில் வரையறுக்கப்பட்டு உள்ளது என்று கூறினார்.

இதையடுத்து,  5 ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகள் கடன்களை ரத்து செய்ய முடியுமா என ஆராய்ந்து பதிலளிக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.