ஊரக உள்ளாட்சி உறுப்பினர்கள் பதவி ஏற்க தடை கோரிய வழக்கு: நாளை விசாரிக்கப்படும் என நீதிபதி அறிவிப்பு

சென்னை:

மிழகத்தில் ஊரகப்பகுதிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் முடிவடைந்து, வெற்றி பெற்றவர்கள், இன்று பதவி ஏற்று வருகின்றனர். இதற்கிடையில், தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக கூறி, தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் பதவி ஏற்க தடைவிதிக்க கோரி திமுக தரப்பில் அவசர வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு, தேர்தல் வழக்காக நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று நீதிபதி அறிவித்து உள்ளார்.

தமிழகத்தில் ஊரகப்பகுதிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை கடந்த 2 மற்றும் 3ந்தேதி முடிவடைந்து வெற்றி பெற்றவர்கள் அறிவிக்கப்பட்டனர். இதல், பல முறைகேடுகள் நடைபெற்றதாக கூறி, திமுக நீதிபதி ஆதிகேவசலு முன்பு அவசர வழக்கு தாக்கல் செய்தது. இதில் நீதிபதி உத்தரவு ஏதும் பிறப்பிக்க மறுத்து விட்டார்.

இந்த நிலையில், இன்று உயர்நீதி மன்ற தலைமை நீபிததி முன்பு,  மாவட்ட பஞ்சாயத்து, ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் பதவியேற்க தடை விதிக்க கோரி திமுக வேட்பாளர்கள் தரப்பில்  முறையீடு செய்யப்பட்டது.

ஆனால், அவர், உச்சநீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டி, ஊராட்சி பிரதிநிதிகள் பதவியேற்பை தடுக்க முடியாது என்றும், அவசர வழக்காக விசாரிக்க முடியாது,  மறுவாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையையும் ஏற்க மறுப்பு தெரிவித்தார்.

மேலும், இந்த புகார்களை  தேர்தல் வழக்காக தாக்கல் செய்யும்படியும்,  ஏற்கனவே வழக்கை விசாரித்த சம்பந்தப்பட்ட நீதிபதி முன் வழக்கு தொடரலாம் என்றும் தலைமை நீதிபதி கூறினார்.

இதையடுத்து, வழக்கறிஞர்கள்,  சம்பந்தப்பட்ட நீதிபதி ஆதிகேசவலு முன் முறையிட்டனர். அதற்கு அவர், வழக்காக மனுத்தாக்கல் செய்தால் நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று கூறி உள்ளார்.

இதன் காரணமாக வழக்கு நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், மாநில தேர்தல் ஆணையத்திற்கு எதிராக பா.ம.க சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தது. அப்போது,  உள்ளாட்சி தேர்தலில் பா.ம.க பெற்ற இடங்களை தேர்தல் ஆணைய இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்றும், இதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் நீதிபதி ஆதிகேசவலு முன்பு பா.ம.க. பாலு முறையீடு செய்தார்.

இதை மனுவாக் தாக்கல் செய்யும்படி நீதிபதி கூறினார்.