ஜெயப்ரதாவை தவறாக பேசியதாக சமாஜ்வாதி தலைவர் மீது வழக்கு

ராம்பூர்

ராம்பூர் தொகுதியில் போட்டியிடும் நடிகை ஜெயப்ரதாவை பற்றி தவறாக பேசியதாக அவரை எதிர்த்து போட்டியிடும் சமாஜ்வாதி தலைவர் அசாம் கான் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

பிரபல நடிகை ஜெயப்ரதா முதலில் சமாஜ்வாதி கட்சியில் இணைந்திருந்தார்.   அதற்கு பிறகு அந்த கட்சியில் இருந்து விலகி எதிரணியில் இணைந்தார்.  தற்போது அவர் பாஜகவில் சேர்ந்துள்ளார்.   இம்முறை ராம்பூர் மக்களவை தொகுதியில்  பாஜக வேட்பாளராக ஜெயப்ரதா போட்டி இடுகிறார்.   அவரை எதிர்த்து மூத்த சமாஜ்வாதி கட்சி தலைவர் அசாம் கான் போட்டி இடுகிறார்.

அசாம் கான் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசுவது வழக்கமான ஒன்றாகும்.    அவருக்கு ஜெயப்ரதாவுக்கும் வெகுநாட்களாக அரசியல் பகை உள்ளது.   அசாம் கான் ஒரு தேர்தல் கூட்டத்தில், “ஜெயப்ரதாவை ராம்பூருக்கு அழைத்து வந்ததே நான் தான்.  அவரை யாரும் தொடாத வண்ணம் நான் பாதுகாத்ததை நீங்கள் அறிவீர்கள்.

அவர் உண்மையான முகத்தை தெரிந்துக் கொள்ள உங்களுக்கு 17 வருடங்கள் ஆகி  உள்ளன.    ஆனால் அவர் காக்கி உள்ளாடை அணிந்த 17 நாட்களில் அவரைப் பற்றிய அனைத்தும் தெரிந்து விட்டது” எனபேசினார்.

ஆர் எஸ் எஸ் தரப்பினர் காக்கி உடை அணிவதால் அவர் இவ்வாறு பேசி உள்ளார்.

ஒரு பெண்ணின் உள்ளாடை குறித்து பேசியதற்கு அசாம் கான் மீது கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.   தேர்தல் கூட்டத்தில் எதிரணி பெண் வேட்பாளரை தரக்குறைவாக பேசியதாக அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது .    இது குறித்து தேசிய மகளிர் ஆணையம் அசாம் கான் விளக்கம் அளிக்க வேண்டும் என அவருக்கு நோட்டிஸ் அனுப்பி உள்ளது.

இது குறித்து ஜெயப்ரதா, “அசாம் கானுக்கு என்னிடம் ஏற்கனவே அரசியல் பகை உள்ளது.   அவர் முன்பு ஒரு முறை என்னைப் போன்ற பெண்ணை ஏறெடுத்து பார்ப்பது கூட தவறு என சொல்லி இருக்கிறார்.   நான் அப்படி என்ன செய்தேன் என தெரியவில்லை.   இது போல் பெண்களை இழிவு படுத்தும் அசாம் கான் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கவேண்டும்” என தெரிவித்துள்ளார்.

அசாம் கான்,”நான் யாரையும் பெயரைக் குறிப்பிட்டு எந்த ஒரு தவறான கருத்தையும் கூறவில்லை.  நான் யாரையும் தரக்குறைவாக பேசுபவன் இல்லை.   நான் இதற்காக எவ்வித விசாரணைக்கும் தயாராக இருக்கிறேன்.   நான் தவறாக பேசியதாக நிரூபிக்கபட்டால் நானே தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகுகிறேன்” என தெரிவித்துள்ளார்.