எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவு கட்ட தடை விதிக்க கோரி வழக்கு: அதிமுகவில் பரபரப்பு

--

சென்னை:

திமுகவின் நிறுவனரான மறைந்த தமிழக முதல்வர்  எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை யொட்டி, சென்னை கடற்கரை சாலையில் எழிலகம் அருகே நூற்றாண்டு  நினைவு வளைவு கட்டப்பட்டு வருகிறது.

இதற்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் தினேஷ் குமார் உயர் நீதிமன்றத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவு  அமைக்கத் தடை விதிக்க வேண்டும் என்று வழக்குத் தொடர்ந்துள்ளார்.

அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ஏற்கனவே காமராஜர் சாலையில் வைக்கப்பட்ட நடிகர் சிவாஜி கணேசன் சிலை, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி அகற்றப்பட்டுள்ளதாகவும், சாலை மேம்பாட்டைத் தவிர்த்து எந்தக் கட்டுமானங்களையும் மேற்கொள்ளக் கூடாது என உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

அதுபோல  தமிழ்நாடு நெடுஞ்சாலைகள் சட்டத்தில், சாலைகளின் குறுக்கே, சாலையோரங்களில் எந்த நிரந்தர கட்டுமானங்களையும் மேற்கொள்ளக் கூடாது எனக் குறிப்பிட்டுள்ளது. ஆனால், அந்தச் சட்டத்தை மீறி எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவு கட்டப்பட்டு வருகிறது. இதன் காரணமாக எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவு கட்ட தடை விதிக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிகிறது.

மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர். நூற்றாண்டு விழா அரசு சார்பில் கொண்டாடப்பட்டு வந்த நிலையில், அவரது நினைவை போற்றும் வகையில், சென்னையில் அவரது நினைவாக நூற் றாண்டு விழா வளைவு அமைக்கப்படும் என்று சட்டப் பேரவையில் அறிவித்தார். அதைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்டு மாதம் 22ந்தேதி   சென்னை காமராஜர் சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவு அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த செப்டம்பர் மாதம் 22ந்தேதி நடைபெற்றது.

அதன்படி, எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நினைவு வளைவு,  ரூ. 2.52 கோடி செலவில், சுமார் 66 அடி அகலமும் 52 அடி உயரமும் கொண்டதாக வளைவு அமைக்கப்படும் என்றும், 3 மாதத்தில் அதற்கான பணிகள் நிறைவு பெறும் என்றும் கூறப்பட்டது.

தற்போது வளைவு அமைக்கும் பணி 50 சதவிகிதம் முடிவடைந்து உள்ள நிலையில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.