Random image

மிர்சாப்பூர் : ரூ. 312 க்காக 41 வருடம் இழுக்கப்பட்ட வழக்கு

மிர்சாப்பூர்

ரூ. 312 நீதிமன்ற கட்டணத்துக்காக போடப்பட்ட ஒரு வழக்கு 41 வருடம் இழுக்கடிப்பட்டு தீர்ப்பு வரும் போது வெற்றி பெற்ற பெண்மணி உயிருடன் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

கங்கா தேவி என்னும் பெண் ஒருவர்  கடந்த 1975 ஆம் வருடம் தன்னுடைய சொத்து குறித்த விவகாரத்தில் மிர்சாப்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார்.  அவருக்கு அப்போது வயது 37.   அந்த வழக்கில் இரு வருடம் கழித்து அவருக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்தது.   அதற்காக அவர் நீதிமன்றக் கட்டணம் ரூ.312 செலுத்த வேண்டும் எனவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது.

கங்காதேவி ரூ. 312 செலுத்தி விட்டு அதற்கான ஆவணங்களை இணைத்து நீதிமன்ற உத்தரவுக்கு விண்ணப்பித்தார்.   ஆனால் அந்த ஆவணம் தொலைந்து விட்டது.   ஆகையால் கங்கா தேவி பணம் செலுத்தவில்லை எனக் கூறிய நீதிமன்றம் அவரை அந்த கட்டணத்தை செலுத்த உத்தரவிட்டது.   தாம் ஏற்கனவே அந்தக் கட்டணமான ரூ.312 ஐ செலுத்தி விட்டதாகவும் அதை மீண்டும் செலுத்த முடியாது எனவும் அவர் மீண்டும் ஒரு வ ழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு வெகுநாட்களாக நிலுவையில் இருந்து கடந்த ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி தீர்ப்பு வெளியாகியது.   அந்த தீர்ப்பில் கங்காதேவி கட்டணம் செலுத்தியது நிரூபிக்கப் பட்டு விட்டதாகவும் அதனால் அவர் மீண்டும் ரூ. 312 செலுத்த வேண்டாம் எனவும்  தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது.   வழக்கில் வெற்றி பெற்ற கங்காதேவி கட்ந்த 2005 ஆம் வருடம் மரணம் அடைந்து விட்டார்.

நீதிமன்ற ஊழியர்கள் செய்த தவறுக்காக போராடிய பெண்மணி தான் வென்றதை பார்க்க உயிருடன் இல்லாதது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.