இயக்குநர் பாலா – நடிகை ஜோதிகா மீது வழக்கு!

பாலா இயக்கத்தில், ஜோதிகா நடித்துள்ள “நாச்சியார்” படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. படத்திலும், டீசரிலும் ஆபாச வார்த்தைகள் அல்லது வன்முறைக் காட்சிகளை வைத்து, பரபரப்பை ஏற்படுத்துவது பாலாவின் வழக்கம். அவரது பரதேசி பட டீசரில், நடிகர்களை கம்பால் கடுமையாக அடித்த நடிக்கச் சொல்லிக்கொடுக்கும் காட்சியை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். அப்போதே, “அடிப்பது எப்படி என்று நடிகர்களுக்குச் சொல்லிக்கொடுக்கும் பாலா, தான் அடிவாங்குவது போல நடித்து அதை நடிகர்களுக்குச் சொல்லிக்கொடுக்கலாமே” என்று சமூகவலைதளங்களில் பலரும் விமர்சித்தனர்.

இந்த நிலையில், அவர் இயக்கிய நாச்சியார் படம் வெளியாக இருக்கிறது. அந்தப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. அந்த டீசரில் காவல்துறை அதிகாரியாக வரும் நடிகை ஜோதிகா, பெண் கைதியை காவல்நிலையத்தில் வைத்து விசாரிக்கும் காட்சிகளில், பெண்களை இழிவுபடுத்தும்படி, “தே.. மகளே..” என்று உச்சரிப்பது போல் வசனங்கள் அமைந்துள்ளதாக சர்ச்சை எழுந்தது.

 

இது பொதுமக்களை பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பலரும் பாலாவையும், ஜோதிகாவையும் கண்டித்தனர்.

இந்த நிலையில் ராஜன் என்பவர் மேட்டுப்பாளையம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் பாலா மற்றும் ஜோதிகா மீது வழக்கு தொடுத்துள்ளார். அவர் தனது மனுவில், “அக்காட்சி, பெண் சமூகத்திற்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இது சட்டத்துக்கு புறம்பான வசனமாகவும் தண்டனைக்குரிய செயலாகவும் இருக்கிறது. ஆகவே ஜோதிகா மற்றும் இயக்குநர் பாலா மீது  இந்திய தண்டனை சட்டப்பிரிவு 294 பி மற்றும் தகவல் தொழில் நுட்ப சட்டப்பிரிவு 67கீழ்  நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

 

இந்த மனு வரும் 28-ம் தேதி விசாரனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.