பாஜகவின் ‘வேல் யாத்திரைக்கு’ தடை கோரி வழக்கு! நாளை விசாரணை

சென்னை: தமிழகத்தில் வரும் 6ந்தேதி வேல் யாத்திரை தொடங்குவதாக தமிழக பாரதிய ஜனதா கட்சி அறிவித்துள்ள நிலையில், அதற்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுஉள்ளது. இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.

திராவிடர் கழகத்தின் கறுப்பர் கூட்டம்,  கடந்த ஆண்டு முருகனின் கந்தசஷ்டி கவனம் குறித்த வெளியிட்ட அவதூறான கருத்து, தமிழகத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதற்கு கடுமையான கண்டனம் எழுந்த நிலையில், அதை வைத்து தமிழகத்தில் பாரதியஜனதா கட்சி அரசியல் செய்து வருகிறது. அதன் ஒருபகுதியாக  வரும் 6ந்தேதி திருத்தணியில் இருந்து திருச்செந்தூர் வரை வேல்யாத்திரை ஒன்றை நடத்தப்போவதாக  அறிவித்து உள்ளது. சுமார் 1 மாத காலம் நடைபெறும் இந்த இந்த வேல் யாத்திரையானது, தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோவில்களுக்கு சென்று இறுதியாக , டிசம்பர் 6ந்தேதி திருச்செந்தூரில் முடிவடைய உள்ளது.

தமிழக பாஜக தலைவர் எல் முருகன் தலைமையில் நடைபெறும் இந்த யாத்திரையில் மத்திய அமைச்சர்களும், பாஜக ஆளும் மாநில முதல்வர்கள், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்பட பலர் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த வேல் யாத்திரையை தடைசெய்ய வேண்டுமென தமிழகத்தில் ஏற்கனவே பல்வேறு அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இதன் காரணமாக மதக்கலவரத்தை ஏற்படுத்த பாஜக முயல்வராக விசிக தலைவர் திருமாவளவனும் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த நிலையில், வேல் யாத்திரைக்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் சென்னையைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் மனு  தாக்கல் செய்துள்ளார். அதில், வேல் யாத்திரையால், தமிழகத்தில்   சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது

இந்த மனு விசாரணைக்கு வரும் என்று உயர்நீதிமன்றம் அறிவித்து உள்ளது.  விசாரணையைத் தொடர்ந்து,  வேல் யாத்திரைக்கு தடை விதிக்கப்படுமா? என்பது தெரிய வரும்.