ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கிறிஸ்துவர்களின் நம்பிக்கைகளைப் புண்படுத்தியதாக கூறி பஞ்சாபில் நடிகை ரவீனா டன்டன், இயக்குநர் ஃபாரா கான் மற்றும் நகைச்சுவையாளர் பாரதி சிங்குக்கு எதிராக இரண்டாவது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணை நடந்து வருவதாக அமிரிஸ்தர் காவல்துறை கண்காணிப்பாளர் விக்ரம் ஜீது துக்கால் தெரிவித்துள்ளார். இதைத் தவிர மகாராஷ்டிராவிலும் இவர்களுக்கு எதிராக வழக்குப் பதிவாகியுள்ளதாகத் தெரிகிறது.

வெள்ளிக்கிழமை அன்றே ஃபாரா கான் தனது ட்விட்டர் பக்கத்தில், “நான் அனைத்து மதங்களையும் மதிக்கிறேன். எதையும் அவமரியாதை செய்ய வேண்டும் என்று எனக்கு நோக்கமில்லை. ரவீனா டன்டன், பாரதி சிங் மற்றும் நான் உட்பட ஒட்டு மொத்த குழுவின் சார்பாக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

“நான் கூறிய வார்த்தையை எந்த மதத்தையும் புண்படுத்தும் விதமாகப் புரிந்துகொள்ள முடியாது. நாங்கள் மூவருமே எப்போதுமே எவரையும் காயப்படுத்த எண்ணவில்லை. அப்படி நடந்திருந்தால் காயப்பட்டவர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என ரவீனா டன்டன் ட்வீட் செய்துள்ளார்.