மீரட்

த்திர பிரதேச ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமை செய்ததாக வழக்கு பதியப்பட்டுள்ளது.

உத்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள மீரட் நகரில் கடந்த 17 ஆம் தேதி அன்று வீங்கிய முகம் மற்றும் கண்களுடன் ஒர் இளம்பெண் புகார் அளித்துள்ளார். மீரட் நகரில் உள்ள நவுசண்டி காவல் நிலையத்துக்கு அவர் வந்த போது அவரால் பேசக்கூட முடியாத நிலையில் இருந்துள்ளார். அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பிய காவல்துறையினர் அவருக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்துள்ளனர்.

அதன் பிறகு அந்தப் பெண், “எனது பெயர் நம்ராதா சிங். எனக்கு 32 வயதாகிறது. எனது கணவர் ஒரு ஐபிஎஸ் அதிகாரி ஆவார். அவர் பெயர் அமித் நிகம்,  அவர் டில்லியில் பணி புரிந்து வருகிறார். அவர் என்னிடம் வரதட்சணை கேட்டு மிகவும் கொடுமை செய்கிறார். என்னை ஒரு மிருகத்தை அடிப்பது போல் அடித்துள்ளார். இது கடந்த சில வருடங்களாகவே நடந்து வருகிறது” என தெரிவித்துள்ளார்.

இதை அடுத்து மீரட் நகர ஏடிஜி பிரசாத் குமார் அமித் நிகம் மீது வழக்கு பதிந்துள்ளார். அமித் நிகம் நாகாலாந்தில் இருந்து தேர்ந்தெடுக்கபட்ட அதிகாரி என்பதால் நாகாலாந்து அரசுக்கும் இது குறித்து தகவல் அனுப்பப்பட்டுள்ளது. நம்ராதா சிங் செய்தியாளர்களிடம் தனது கணவர் தம்மை டில்லியில் இருக்கும் போதே கொடுமை செய்ததால் தாய் வீடான மீரட் நகருக்கு வந்ததாகவும் கணவர் இங்கும் வந்து தாக்கியதாக தெரிவித்துள்ளார்.