ஆதித்யநாத்திடம் கேள்வி.. செய்தியாளர் மீது வழக்கு..

’ஏன் இப்படி?’’ என்று யாராவது கேள்வி எழுப்பினால், உத்தரப்பிரதேச மாநில பா.ஜ.க.முதல்-அமைச்சர் ஆதித்யநாத்துக்கு மூக்குக்கு மேல் கோபம் பொத்துக்கொண்டு வருகிறது.

செய்தியாளர்கள் வினா எழுப்பினால், வேறு வினையே வேண்டாம். உடனடியாக வழக்குகள் தான்.

அப்படியான ஒரு சம்பவம்.

கொரோனாவை கட்டுப்படுத்த நாடெங்கும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, ஊரே வீட்டுக்குள் முடங்கிக் கிடந்த போது, அவர் அயோத்திக்குச் சென்றார்.

ராமநவமி விழாவில் கலந்து கொண்டார்.

‘’ சாமானிய மக்கள் ஊரடங்கைக் கடைப் பிடிக்கும் நேரத்தில் முதல் –அமைச்சரான நீங்கள் இப்படி பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்வது நியாயமா?’’ என ‘தி வயர்’ என்ற இணைய தளத்தில், அதன் செய்தியாளர் வரதராஜன் என்பவர் கேள்வி எழுப்பி இருந்தார்.

பொங்கி எழுந்தார், ஆதித்யநாத்.

பைசாபாத் போலீசார்,முதல்வரை விமர்சித்த, வரதராஜன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதற்கு எதிர்க்கட்சிகள் கடும்  கண்டனம் தெரிவித்துள்ளன.

‘’ செய்தியாளர் மீதான எஃப்.ஐ.ஆரை. வாபஸ் பெற வேண்டும்’’ என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.

‘’இது பத்திரிகை சுதந்தரம் மீதான தாக்குதல்’’ என்று இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் டி.ராஜா கண்டித்துள்ளார்.

– ஏழுமலை வெங்கடேசன்