சப்பாத்திக்குத் தொட்டுக்கொள்ள உப்பு அளித்த பள்ளி: காணொளி எடுத்தவர் மீது வழக்கு

மிர்சாப்பூர்

பி மாநிலப் பள்ளியில் மதிய உணவில் சப்பாத்திக்குத் தொட்டுக் கொள்ள உப்பு அளித்த வீடியோவை எடுத்து வெளியிட்ட பத்திரிகையாளர் மீது அரசு வழக்குப் பதிந்துள்ளது.

வெகுநாட்களுக்கு முன்பு தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியில் அப்போதைய முதல்வரான காமராஜர் முதன் முதல் மாணவர்களுக்கான மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தார். அது பல மாநிலங்களுக்கும் அதன் பிறகு பரவியது. இந்த வரிசையில் உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள 1 லட்சம் பள்ளிகளில் கல்வி பயிலும் ஒரு கோடி  மாணவர்களுக்கு மதிய உணவு அளிக்கப்படுகிறது. இந்த திட்டத்தின்படி ஒவ்வொரு மாணவருக்கும் தினம் 12 கலோரிகள் புரதம் உள்ளிட்ட 450 கலோரி சத்துள்ள உணவு அளிக்கப்பட வேண்டும்.

சமீபத்தில் உத்திரப் பிரதேச மாநிலத்தில் மிர்சாப்பூரில் உள்ள ஒரு பள்ளியில் மதிய உணவில் சப்பாத்தியும் அதற்குத் தொட்டுக் கொள்ள உப்பும் வழங்கப்பட்டுள்ளது.  இந்த நிகழ்வை பத்திரிகையாளர் பிரவீன் ஜெய்ஷ்வால் என்பவர் வீடியோவாக பதிந்துள்ளார். அவர் தாம் எடுத்த வீடியோவை செய்தியாக வெளியிட்டார். இது நாடெங்கும் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. குறிப்பாக எதிர்க்கட்சிகள் மாநிலத்தை ஆளும் பாஜக அரசைக் கடுமையாக விமர்சித்தனர்.

தற்போது அரசு தரப்பில் இந்த செய்தியை வெளியிட்ட  பத்திரிகையாளர் பிரவின் ஜெய்ஷ்வால் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. அரசு தொடுத்துள்ள இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கையில், “ அரசு மீது களங்கம் உண்டாக்கும் நோக்கத்துடன் பத்திரிகையாளர் பிரவீன் ஜெய்ஷ்வால் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். இதில் அந்த கிராமத்தின் தலைவரும் இணைந்துள்ளார். அரசின் மீது இந்த வீடியோ தேவையற்ற  அவநம்பிக்கையை உண்டாக்கி இருக்கிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கார்ட்டூன் கேலரி