சிறுபான்மையினரை குடிமகன் ஆதாரம் கேட்டு தொந்தரவு செய்த நவநிர்மாண் சேனா மீது வழக்கு

புனே

காராஷ்டிர நவநிர்மாண் சேனா அமைப்பினர் சிறுபான்மையினரைக் குடிமகன் என்பதற்கான ஆதாரம் கேட்டு தொந்தரவு செய்ததற்காக காவல்துறையினர் வழக்கு பதிந்துள்ளனர்.

மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா கட்சியினர் குடியுரிமை சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.  அந்தக் கட்சித் தலைவர் கடந்த 9 ஆம் தேதி மும்பையில் ஒரு பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்டார். அப்போது அவர் இந்தியாவில் ஊடுருவி உள்ள வங்கதேசத்தவர் மற்றும் பாகிஸ்தானியரை விரட்ட வேண்டும் என உரையாற்றினார்.

அதையொட்டி புனே நகரில் அக்கட்சியினர் தாமாகவே ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று சட்ட விரோதமாகக் குடியேறியவர் குறித்து ஆய்வு நடத்தி உள்ளனர்.  அவர்கள் பாலாஜி நகரில் உள்ள ரோஷன் ஷேக் என்னும் இஸ்லாமியர் வீட்டில் நுழைந்து அவரை வங்கதேசத்தவர் எனக் கூறி ஆதாரம் கேட்டு மிரட்டி உள்ளனர்.    அவர் தாம் இந்தியர் எனவும் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் எனவும் கூறி உள்ளார்.

அத்துடன் தாம் தொழில் நிமித்தமாக புனேவில் தங்கி உள்ளதைத் தெரிவித்து அதற்கான ஆவணங்களைக் காட்டி உள்ளார்.   ஆயினும் மகாராஷ்டிரா நவநிர்மாண் கட்சியினர் அவரை தொடர்ந்து மிரட்டி உள்ளனர்.  ரோஷன் மற்றும் அவருடன் தங்கி இருந்த இருவரையும் அவர்கள் வலுக்கட்டாயமாகக் காவல்நிலையத்துக்கு இழுத்துச் சென்றுள்ளனர்.

அங்கு ரோஷன் மற்றும் அவருடன் தங்கி இருந்தவர்கள் இந்தியர்கள் என்பதும் சட்ட விரோதமாகக் குடியேறியவர்கள் இல்லை என்பதும் தெரிய வந்துள்ளது.   அதன் பிறகு கட்சியினர் அங்கிருந்து சென்றுள்ளனர்.  ரோஷன் ஷேக் தாம் துன்புறுத்தப்பட்டது குறித்துக் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ரோஷன் ஷேக் அளித்த புகாரின் அடிப்படையில் மகாராஷ்டிர நவநிர்மாண் கட்சியைச் சேர்ந்த 8 பேர் மீது ஐந்து சட்டப்பிரிவுகளின் மீது காவல்துறையினர் வழக்குப் பதிந்துள்ளனர்.   இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.