டிரைலர்களை திருடி விற்க முயன்ற மும்பை அமலாக்கத்துறை அதிகாரிகள் : வழக்குப் பதிவு

சூரத்

டிரைலர்களை திருடி விற்க முயன்றதாக மும்பை அமலாக்கத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

அக்டோபர் 16 அன்று சூரத் நகரின் காம்ரேஜ் பகுதியில் உள்ள சுங்கச்சாவடியில் மூன்று டிரைலர்களில் தலா இரண்டு டிரைலர் வீதம் ஏற்றப்பட்டுச் சென்றுக் கொண்டிருந்தது. காவல்துறையினர் தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.  அந்த லாரி ஓட்டுநர்களிடம் இவை குறித்த எவ்வித ஆவணங்களும் இல்லாத்தால் அவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

ஓட்டுநர்கள் மற்றும் உதவியாளர்களிடம் விசாரித்த போது அவர்கள் வாபியில் உள்ள மகாதேவ் ரோட்லைன்ஸ் நிறுவனத்தில் பணி புரிவதாகத் தெரிவித்துள்ளனர்.  மேலும் இந்த ஆறு டிரைலர்களையும் சந்தோஷ் சிங் என்பவர் தேசிய நெடுஞ்சாலை 48 ல் உள்ள நிறுத்துமிடத்தில் ஏற்றியதாகக் கூறி உள்ளனர்.  இவற்றை மகாராஷ்டிராவில் உள்ள சஞ்சய் ஜெய்ஷ்வால் என்பவரிடம் ஒப்படைக்க உள்ளதாக தெரியவந்தது.

மும்பையில் வாடலா பகுதியில் உள்ள சந்தோஷ் சிங், அஃப்சர் கான், புனாஜி  சாவேகர் ஆகியோரை காவல்துறையினர் பிடித்து விசாரித்தனர்  அவர்கள் அப்போது மும்பை அமலாக்கத்துறை துணை இயக்குநர் பிரவின் சாலுங்கே மற்றும் பீராராம் ஆகியோர் இந்த டிரைலர்களை திருடி விற்பதில் பங்கு பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

இந்த டிரைலர்கள் கடந்த 2018 ஆம் வருடம் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் சித்தி விநாயக் லாஜிஸ்டிக்ஸ் என்னும் நிறுவனத்திடம் இருந்து கைப்பற்றியவை ஆகும். இவை சூரத் நகரில் உள்ள ஒரு பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் நிறுத்துமிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.   இவற்றைத் திருடி விற்க முயன்றாக சூரத் காவல் துறையினர் வழக்குப் பதிந்துள்ளனர்.

இந்த வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சாலுங்கே மற்றும்  பீராராம் உள்ளிட ஐவர் சேர்க்கப்பட்டுள்ளனர்.  வழக்கின் முதல் தகவல் அறிக்கையில், “தேசிய நெடுஞ்சாலை 48 இல் பல்வாஸ் ஓட்டல் அருகில் உள்ள நிறுத்துமிடத்தில் 207 டிரைலர்கள் நிறுத்தப்பட்டிருந்தன.  அவற்றில் 6 டிரைலர்களை சந்தோஷ் மற்றும் அவர் கூட்டத்தினர் பதிவு எண்ணை மாற்றி விற்க எடுத்துச் சென்றுள்ளனர்.

அக்டோபர் மாதம் 11 ஆம் தேதி அன்று சந்தோஷிடம் அமலாக்கத்துறை அதிகாரி  சாலுங்கே இந்த டிரைலர்களை எடுத்துச் சென்று தலா ரூ.2 லட்சத்துக்கு விற்கச் சொல்லி உள்ளார்.  அதில் சந்தோஷ் ரூ.20000 முதல் ரூ.30000 வரை எடுத்துக் கொண்டு மீதமுள்ளதை அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு அளிக்க வேண்டும் எனக் கூறி உள்ளார்.

மேலும் இதில் ஏதும் குழறுபடி ஏற்பட்டால் சந்தோஷ் அனைத்து பொறுப்புக்களையும் ஏற்க வேண்டும் எனவும் அதிகாரிகள் குறித்து எதுவும் சொல்லக்கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.   ஆயினும் பாதுகாப்புக்காக இந்த உரையாடலை சந்தோஷ் மொபைலில்பதிவு செய்து தனது நண்பருக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்பி உள்ளார்.” என் தெரிவிக்கப்பட்டுள்ளது

அக்டோபர் மாதம் 22 ஆம் தேதி காவல்துறையினர் மூவரைக் கைது செய்து 5 நாட்கள் விசாரணைக்காக எடுத்துள்ளனர்.   விசாரணை முடிந்து ,மூவரும் சூரத் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.   அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை. அவர்களிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.