திருவள்ளூர்: தடையை மீறி கிராம சபைக் கூட்டம் நடத்தியதாக திமுக தலைவர் ஸ்டாலின் உள்பட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.அரவிந்தன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:  திருவள்ளூர் மாவட்டத்தில் நாள்தோறும் கொரோனா நோய் தொற்று பரவல் என்பது அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந் நிலையில் தடுப்பு பணிகள் மேற்கொண்டு வரும் நிலையில் வெள்ளவேடு காவல் நிலையத்திற்குள்பட்ட ஜமீன்கொரட்டூர் கிராமத்தில் வெள்ளிக்கிழமை திமுக சார்பில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை காலை 10.50 முதல் 11.20 மணிவரையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் திமுக தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில், அக்கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளர் நாசர், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கிருஷ்ணசாமி (பூந்தமல்லி), வி.ஜி.ராஜேந்திரன், திருவள்ளூர் ஒன்றியக்குழு தலைவர் ஜெயக்குமார், மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் தேசிங்கு, மேற்கு ஒன்றிய செயலாளர் கந்தபாபு, ஜமீன்கொரட்டூர் ஊராட்சி தலைவர் கந்தபாபு ஆகியோர் கிராம சபைக் கூட்டம் என்ற தலைப்பில் நடத்தினர்.
அதோடு, இந்த கூட்டத்தில் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த 300 பேர் எவ்வித அனுமதியுமின்றி, 144 ஊரடங்கு தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் கரோனா நோய் தொற்று பரவும் வகையில் ஒன்று கூடினர். இது குறித்து கொரட்டூர் கிராம நிர்வாக அலுவலர் சகாய அல்போன்சா வெள்ளவேடு காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் வெள்ளவேடு காவல் நிலைய போலீசார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.