சென்னை:

கமலின் இந்து தீவிரவாதி பேச்சுக்கு ஆதரவாக பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின்போது, சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் கோட்ஸே என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பேசினார்.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கமல் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் அவர் முன்ஜாமீன் பெற்றார்.

இந்நிலையில், கமலுக்கு ஆதரவாக பேசியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், எம்பியுமான திருமாவளவன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்து மக்கள் முன்னணி அமைப்பின் நிறுவனர் நாராயணன் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகாரில், மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் கமல் முன் ஜாமீன் கோரியபோது, இது தொடர்பாக தலைவர்கள் பேசக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனை மீறி இந்து மதத்தை விமர்சித்துப் பேசிய திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இதனையடுத்து, கலகம் ஏற்படுத்துவது, பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்துவது ஆகிய பிரிவுகளின் கீழ், திருமாவளவன் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.