முதியவரை மிரட்டி ரூ.10 லட்சம் காசோலை பறிப்பு:   விசிக பிரமுகர் மீது வழக்குப் பதிவு

வீடு புகுகுந்த முதியவரை மிரட்டி ரூ. 10 லட்சம் காசோலையை எழுதிவாங்கிச் சென்ற வி.சி.க. பிரமுகர், அவரது மனைவி, காவல் ஆய்வாளர் ஆகியோர் மீது தாம்பரத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னையை அடுத்த கிழக்கு தாம்பரம் சென்னை கிழக்கு தாம்பரம் இரும்புலியூர், திலகவதி நகரில் வசிப்பவர் முத்தையா (வயது 72). கட்டுமானத் தொழில் செய்துவந்த முத்தையா தற்போது தனது மகன் கிறிஸ்டோபர் வீட்டில் மனைவியுடன் வசித்து வருகிறார்.

கடந்த சனிக்கிழமை இரவு 11 மணி அளவில் இவருடைய வீட்டுக்குள் ஆய்வாளர் தாம்சன், காஞ்சிபுரம் மாவட்ட விசிக செய்தித் தொடர்பாளர் பாண்டியன் அவரது மனைவி டிவி நடிகை சாஜினி மற்றும் சிலர் அத்துமீறி நுழைந்தனர்.

பாண்டியன் – சாஜினி

முத்தையாவிடம், “உனது மகன் ரூ. 10 லட்சம் தரவேண்டும். அந்தத் தொகைக்கான காசோலை எழுதிக்கொடு” என்று மிரட்டி எழுதி வாங்கிச் சென்றனர்.

இதுபற்றி மறுநாள் முத்தையா காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாகி அளித்தார்.

“அவர்கள் வந்தபோது எனது மகன் வீட்டில் இல்லை. அவர்கள், ரூ.10 லட்ச ரூபாய்க்கு காசோலை எழுதித் தராவிட்டால் குடும்பத்தையே கொன்றுவிடுவோம் என்று மிரட்டினார்கள். ஒரு ஆய்வாளரே இரவில் அத்துமீறி நுழைந்து ரவுடிகளை வைத்து மிரட்டலாமா என்று நான் கேட்டதற்கு,  நான் போலீஸில் ரவுடி ஆய்வாளர் என்று பெயர் வாங்கியவன். இங்குள்ள ஏசி, இன்ஸ்பெக்டர் யாரும் ஒன்றும் செய்ய முடியாது என ஆய்வாளர் தாம்சன் மிரட்டினார்” என்று முத்தையா தெரிவித்தார்.

தாம்சன்

இந்த புகார் குறித்து நடவடிக்கை எடுக்க காவல் ஆணையர் உத்தரவிட்டார். விசாரணையில் ஆய்வாளர் தாம்சன், வி.சி.க. பிரமுகர் பாண்டியன் அவரது மனைவி டி.வி. நடிகை சாஜினி ஆகியோர் ரவுடிகளுடன் வந்து காசோலையை மிரட்டி எழுதி வாங்கியது தெரியவந்தது.

இதையடுத்து ஆய்வாளர் தாம்சன், விசிக பிரமுகர் பாண்டியன், அவரது மனைவி சாஜினி உள்ளிட்டோர் மீது ஆபாசமாகப் பேசுதல் , கத்தியைக் காட்டி மிரட்டி வழிப்பறி, கொலை மிரட்டல் உட்பட ஐந்சு பிரிவுகளில் பீர்க்கங்கரனை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

ஆய்வாளர் தாம்சன் ஏற்கெனவே பணியிலிருந்தபோது லஞ்சம் வாங்கிய வழக்கில் லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் பிடிபட்டு தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.