சென்னை

ரடங்கால் மாணவர்கள் வீட்டில் முடங்கி உள்ளதால்  இறுதியாண்டு செமஸ்டர் தேர்வை ரட்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கொரோனா பரவுதலைக் கட்டுப்படுத்த அனைத்து கல்வி நிலையங்களும் மார்ச் மாத இடையில் மூடப்பட்டன.  அதன் பிறகு ஊரடங்கு காரணமாக இன்று வரை திறக்கப்படவில்லை.  இதனால் பொறியியல் உள்ளிட்ட பல தொழிற்கல்வி மாணவர்களுக்கு இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வு நடைபெறவில்லை.   இன்னும் கொரோனா தாக்குதல் கட்டுக்குள் வராததால் தேர்வுகள் எப்போது நடக்கும் என யாராலும் சொல்ல முடியாத நிலை உள்ளது.

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் கொளத்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் வி ஆனந்த் ஒரு வழக்கு மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.  அதில் அவர்,”தற்போது அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் கொரோனா தனிமை வார்டுகளாக மாற்றப்பட்டுள்ளன.  கொரோனா பாதிப்பு செப்டம்பருக்கு மேல் குறையக்கூடும் எனவும் வரும் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

எனவே வீட்டில் முடங்கிக் கிடக்கும் இறுதி ஆண்டு மாணவர்கள் தங்கள் தேர்வுகளை ஜனவரியில் எழுத நேரிடும். அந்த தேர்வு முடிவுகள் வெளியாக மார்ச் மாதம் ஆகலாம்.  ஆகவே அவர்கள் ஓராண்டு காத்திருக்க நேரிடுகிறது.   அவர்களுடைய சீனியாரிடி இதனால் பாதிக்கப்படும். தேர்வுகள் குறித்து எவ்வித அறிவிப்பும் இதுவரை வெளியாகாததால் உடனடியாக தேர்வு நடக்க வாய்ப்பில்லை.   எனவே இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வை ரத்து செய்து அனைவரையும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும்” எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

நேற்று இந்த மனு நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா ஆகியோரின் அமர்வின் கீழ் விசாரணைக்கு வந்தது   அப்போது நீதிபதிகள் இந்த மனுவுக்குத் தமிழக அரசு, மத்திய அரசு மற்றும் பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு இன்னும் 2 வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.  இந்த வழக்கு இரு வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.