Random image

இந்திப் படமும் இந்துக் கடவுள்களும் : சல்மான் கான் மீது வழக்கு

முசாபர்பூர்

பீகார் மாநிலம் முசாபர்பூர்  நீதிமன்றத்தில் சல்மான் கான் மீது அவர் படம் தொடர்பாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பாலிவுட்டின் புகழ் பெற்ற நடிகர் மேலும் மேலும் சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.   முதலில் குடிபோதையில் கார் ஓட்டி நடைபாதையில் உறங்கியவர்கள் மீது காரை ஏற்றியதாக ஒரு சர்ச்சை எழுந்தது.   அதன் பிறகு அரிய வகை மானை வேட்டையாடிய வழக்கில் சிறை தண்டனை பெற்றார்.

தற்போது ஜாமீனில் வந்துள்ள சல்மான் கான் லவ் ராத்திரி என்னும் இந்தி திரைப்படத்தை தயாரித்து வருகிறார்.  இந்த படத்தில் அவரும் நடித்து வருகிறார்.  இந்தப் படத்தின் பெயருக்கு முதலில் சர்ச்சை கிளம்பியது.   இந்துக்களின் முக்கிய பண்டிகையான நவ ராத்திரியை கிண்டல் செய்யும் வகையில் இவர் பெயர் வைத்துள்ளதாக புகார்கள் எழுந்தன.

வரும் அக்டோபர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட இந்த படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது.   இந்த டிரெய்லர் அடுத்த சர்ச்சையை உண்டாக்கி உள்ளது.  இந்து அமைப்புக்கள் பல இந்த டிரெய்லர் இந்துக் கடவுளான துர்கை அம்மனை இழிவுபடுத்துவது போல் உள்ளதாக கூறின.

பீகார் மாநிலம் முசாபர்பூர் நீதிமன்றத்தில் சுதிர்குமார் என்பவர் இந்த படம் இந்துக்களின் உணர்வுகளை புண் படுத்துவதாக கூறி வழக்கு தொடர்ந்துள்ளார்.   பிரபல நடிகர் சல்மான் கான் மீது தொடரப்பட்ட இந்த வழக்கு வரும் 12 ஆம் தேதி அன்று விசாரணைக்கு வருகிறது.