வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் பரப்பளவை குறைப்பது தொடர்பாக உயர்நீதி மன்றத்தில் வழக்கு..

சென்னை:

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் பரப்பளவை தமிழகஅரசு குறைக்க முயற்சி செய்து வருவதாக சர்ச்சை எழுந்துள்ளது. இது தொடர்பாக, தமிழக அரசின் நடவடிக்கைக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த மனு மீது அடுத்த வாரம் விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை அருகே உள்ள  செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள  வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயமாக திகழ்கிறது. இந்தியாவில் உள்ள முக்கிய பறவை சரணாலயங்களில் இதுவும் ஒன்று.  இங்கு வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பறவைகள் ஆண்டுதோறும் வந்து செல்வது வழக்கம். குறிப்பாக நத்தை, குத்தி நாரை, சாம்பல் நாரை, கூழைகடா, பாம்புதாரா, வெள்ளை அரிவாள் மூக்கன், கரண்டிவாயன், மஞ்சள் மூக்கு நாரை உள்பட 27 வகை பறவைகள் ஆண்டுதோறும் இனப்பெருக்கத்துக்காக வருகின்றன.

இந்த  சரணாலயத்தின் பரப்பளவைக் குறைக்கும் நடவடிக்கையில் தமிழக அரசு இறங்கியுள்ளதாக சர்ச்சைகள் எழுந்துள்ளது. ஆனால், தமிழகஅரசு அப்படி ஏதும் இல்லை என்று மறுப்பு தெரிவித்து உள்ளது.

இந்த நிலையில், சென்னை சூளைமேட்டை சேர்ந்த வழக்கறிஞர் எஸ்.ஸ்டாலின் ராஜா, வேடந்தாங்கலின் பரப்பை குறைக்கும் தமிழகஅரசின் நடவடிக்கைக்கு  தடை விதிக்க கோரி  சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

அவரது மனுவில், வேடந்தாங்கல் சரணாலயத்தின் பரப்பு 29.51 ஹெக்டேர். கடந்த 1996ல் வேடந்தாங்கல் சரணாலயத்தில் உள்ள குளத்தை சுற்றி 5 கிலோமீட்டர் பரப்பளவு வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின்கீழ் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. பின்னர் இந்த பகுதி பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது.

ஆனால், தற்போரு, ஒரு தனியார் மருந்து தொழிற்சாலையின் விரிவாக்கத்திற்காக இந்த சரணாலயத்தின் பரப்பளவை 5 கிலோ மீட்டரில் இருந்து 3 கிலோ மீட்டராக குறைத்து அறிவிப்பதற்கான கருத்துருவை தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மை செயலாளர் ஷம்பு கல்லோலிகர் தேசிய விலங்குகள் நல வாரியத்துக்கு கடந்த மார்ச் 19ம் தேதி அனுப்பியுள்ளார்.

தனியார் நிறுவனத்திற்காக சட்ட விதிகளுக்கு முரணாக இயற்கையாக அமைந்துள்ள சரணாலயத்தின் பரப்பளவை குறைப்பது தவறான செயலாகும்.

இதனால், சரணாலயத்திற்கு வரும் பறவைகளின் வரத்து குறைந்துவிடும். சம்மந்தப்பட்ட நிறுவனத்தால் தினமும் 1.76 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்கப்படுவதால் நிலத்தடி நீர் குறைந்துவிடும். இதனால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படும்.

ஏற்கனவே இதே போன்று சண்டிகர் அருகேயுள்ள சுக்னா ஏரி மற்றும் சரணாலய பகுதியில் டாடா நிறுவனத்திற்கு வீடு கட்டும் திட்டத்திற்காக வழங்கப்பட்ட அனுமதியை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் பரப்பளவை குறைத்து மாற்றி அறிவிப்பதற்கும், தொழிற்சாலையை விரிவுபடுத்தும் திட்டத்திற்கு அனுமதி வழங்குவதற்கும் தடை விதிக்க வேண்டும்.
விதிமுறைகளுக்கு முரணாக சரணாலயப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறும் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என அதில் தெரிவித்து உள்ளார்.
 இந்த மனு மீதான விசாரணை அடுத்த வாரம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.