உள்ளாட்சித் தேர்தல் தலைவர் பதவிக்கு இடஒதுக்கீடு கோரி வழக்கு! அரசுக்கு உயர்நீதி மன்றம் நோட்டீஸ்

சென்னை:

மிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் டிசம்பர் மாதம் இறுதியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், உள்ளாட்சித் தேர்தல் தலைவர் பதவிக்கு போட்யிடுவதில்,  இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இதுகுறித்து அரசு பதில் அளிக்க சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு வழக்கை ஜனவரிக்கு ஒத்தி வைத்தது.

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாத நிலையில், உச்சநீதி மன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து, இந்த ஆண்டு இறுதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தவேண்டிய கட்டாயத்துக்கு தமிழகஅரசு தள்ளப்பட்டு உள்ளது. இதன் காரணமாக டிசம்பர் இறுதியில் தேர்தல் நடைபெறலாம் என எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இதற்கிடையில்,  உள்ளாட்சித் தேர்தலில் மாநகராட்சி துணை மேயர், நகராட்சி துணைத் தலைவர், கிராம பஞ்சாயத்து துணைத் தலைவர் பதவிகள் மறைமுக தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படும் என தமிழகஅரசு புதிய சட்டத்தை கொண்டு வந்துள்ளது.

இந்த நிலையில, இந்திய குடியரசுத் கட்சித் தலைவர் சே.கு.தமிழரசன் சென்னை உயர்நீதி மன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில்,  உள்ளாட்சி அமைப்புக்களான மாநகராட்சியில் துணை மேயர், நகராட்சிகளில் துணை தலைவர், கிராம பஞ்சாயத்துக்களில் துணைத் தலைவர் போன்ற மறைமுக தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படும் பதவிகளில், பட்டியலின மற்றும் பழங்குடியின பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக, சட்டம் கொண்டு வரலாம் என 2012 ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு அறிவுறுத்தியிருந்தது.

இந்த உத்தரவின் அடிப்படையில், உள்ளாட்சி அமைப்புக்களில் மறைமுக தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படும் துணை மேயர், துணைத் தலைவர் போன்ற பதவிகளில், பட்டியலின மற்றும் பழங்குடியின பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறி உள்ளார்.

அத்துடன், தமிழகத்தில் உள்ள 15 மாநகராட்சிகள், 33 மாவட்ட பஞ்சாயத்துக்கள், 152 நகராட்சிகள், 561 பேரூராட்சிகள், 388 பஞ்சாயத்து ஒன்றியங்கள், 12 ஆயிரத்து 618 கிராம பஞ்சாயத்துக்கள் என, 13 ஆயிரத்து 870 பதவிகள் மறைமுகத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. இதுதவிர, உள்ளாட்சி அமைப்புக்களில் பல்வேறு நிலைக் குழுக்களும் உள்ளன… இக்குழுக்களில் பட்டியலின மற்றும் பழங்குடியின பெண்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை என்றும்,  துணை மேயர், துணைத் தலைவர் பதவிகளுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டால், நான்கு மாநகராட்சிகளில் துணை மேயர், 46 நகராட்சிகளில் துணைத் தலைவர், 168 பேரூராட்சிகளில் துணைத் தலைவர்கள், மாவட்ட பஞ்சாயத்தில் ஒரு துணைத் தலைவர், 3,786 கிராம பஞ்சாயத்து துணைத் தலைவர் பதவிகள் பட்டியலின மற்றும் பழங்குடியின பெண்களுக்கு கிடைக்கும் என்றும், துணைமேயர், துணைத் தலைவர் பதவிகளுக்கு இடஒதுக்கீடு வழங்கக் கோரி அரசுக்கு மனு அளித்தும் எந்த பதிலும் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளாட்சி அமைப்புகளின் துணை மேயர், துணைத் தலைவர் பதவிகளில் பட்டியலின மற்றும் பழங்குடியின பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் வரை உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியிட தடை விதிக்க வேண்டும் எனவும் கோரியுள்ளார்.

இந்த மனு மீதான விசாரணை இன்று  நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சேஷசாயி  அமர்வில் நடைபெற்றது. விசாரணையைத் தொடர்ந்து, இந்த மனு குறித்து,   தமிழக தலைமைச் செயலாளர், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை செயலாளர், மாநில தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஜனவரி 7 ம் தேதிக்கு தள்ளிவைத்தது.