லக்னோ:

நடிகர் கமல்ஹாசன் மீது உத்தரபிரதேசம் மாநிலம் பனாரஸ் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக நடிகர் கமல் டுவிட்டர் மூலம் சில கருத்துக்களை தெரிவித்து வருகிறார். அரசியல் சார்ந்த கருத்துக்கள் மட்டுமின்றி பொது நலன் சார்ந்த கருத்துக்களையும், மத ரீதியிலான கருத்துக்களையும் தெரிவித்து வருகிறார். டெங்கு காய்ச்சல் நிவாரணியான நிலவேம்பு கசாயம் குறித்தும் எதிர் கருத்துக்களை தெரிவித்தார்.

இதனால் அவருக்கு எதிராக சில அரசியல் கட்சிகள் கருத்து தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் சமீபத்தில் அவர் டுவிட்டரில் வெளியிட்ட ஒரு கருத்தில் இந்து தீவிரவாதம் என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு நாடு முழுவதும் பரவலாக கண்டனங்கள் எழுந்தது.

இந்நிலையில் கமல் மீது உபி மாநிலம் பனாரஸ் காவல்நிலையில் புகார் செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் மதத்துக்கு எதிராக கருத்து தெரிவித்தல், அவதூறு பரப்புதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் நடிகர் கமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பாஜக ஆளும் மாநிலத்தில் கமல் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.