சென்னை: கொரோனா ஹாட்ஸ்பாட்டாக மாறிய கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்ட நிலையில்,கடந்த மாதம் மீண்டும் திறக்கப்பட்டது. முதல்கட்டமாக மொத்த விலைகள் மற்றும் காய்கறி கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்ட நிலையில், கோயம்பேட்டில் உள்ள அனைத்து மொத்த கனி வியாபார கடைகளைத் திறக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில், சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமம்  (சிஎம்டிஏ) பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா நோய்த்தொற்றுப் பரவலுக்காக  காரணமாக கோயம்பேடு வணிக வளாகம் திகழ்ந்ததால் மூடப்பட்டது. பின்னர் சுமார் 5 மாதங்களுக்கு பிறகு பல்வேறு கட்டுப்பாடுகளுடன்  கடந்த செப்டம்பர் மாதம்  18-ந் தேதி முதல் கோயம்பேட்டில் உணவு தானிய அங்காடி திறக்க அனுமதி வழங்கப்பட்டது.  அதைத்தொடர்ந்து,  28-ந் தேதி முதல் கோயம்பேடு காய்கறி மார்க்கெட் திறக்கப்பட்டது. அதையடுத்து,  கோயம்பேட்டில் இருந்து தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 10 நாளில் 50 பேருக்கு தொற்று பரவல் உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், கோயம்பேட்டையில் உள்ள அனைத்து மொத்த காய்கறி கடைகளையும் திறக்க உத்தரவிட வேண்டும் என  காயகனி மொத்த வியாபாரிகள் முன்னேற்றச் சங்கத்தின் பொதுச் செயலாளா் எம்.செல்வம் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா். இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆா்.ஹேமலதா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் எம்.புருஷோத்தமன் வாதிடும்போது, ‘ஆயுதபூஜை நெருங்கி வருவதால் பழங்கள் விற்பனை முக்கிய பங்கு வகிக்கும். எனவே, கனிகள் மொத்த கடைகளை கோயம்பேடு சந்தையில் திறக்க உத்தரவிட வேண்டும் என்றாா்.

அப்போது, அரசுத் தரப்பில் வாதிடும்போது, ‘கோயம்பேடு சந்தையில் பராமரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன. அந்தப்பணிகள் முடிந்த பின்னரே படிப்படியாக கடைகள் திறக்கப்படும்’ என தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், கோயம்பேடு சந்தையில் காய்கறி சில்லறை விற்பனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதா என கேள்வி எழுப்பினா்.

பின்னா், இதுசம்பந்தமாக புகைப்பட மற்றும் விடியோ ஆதாரங்களுடன் தமிழக நகராட்சி நிா்வாக அலுவலா், சிஎம்டிஏ, கோயம்பேடு சந்தை நிா்வாகக் குழு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை வரும் டிசம்பா் 14-ம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.