சென்னை: விநாயகர் சதுர்த்திக்காக, பொதுஇடத்தில் விநாயகர் சிலை வைத்து வழிபடவும், ஊர்வலம் நடத்தவும், தமிழகஅரசு அறிவித்த தடை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், உயர்நீதி மன்றம் மதுரை கிளை சரமாரியாக கேள்வி எழுப்பியதுடன், மனுதாரர் வழக்கை திரும்பப் பெற வேண்டும் என்றும் இல்லையென்றால் அபராதம் விதிக்கப்படும் என நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக  வரும் 22ந்தேதி  விநாயகர் சதுர்த்தி தினத்தன்று பிரதான இடங்களில் விநாயகர் சிலை வைத்து கொண்டாட தமிழக அரசு  தடைவிதித்தது.

தமிழகஅரசின் உத்தரவை எதிர்த்து, பாஜக மற்றும் இந்து அமைப்புகள் சார்பிலும் வழக்குகள் தொடரப்பட்டது. மேலும், ராஜபாளையத்தை சேர்ந்த ராமராஜ் என்பவர் சார்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

மனுவில்,  ராஜபாளையம் அருகே ஸ்ரீ மாப்பிள்ளை விநாயகர் கோயிலில் கடந்த 32 வருடங்களாக விநாயகர் சதுர்த்தி விழா மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது என்றும் எனவே இந்த வருடமும் விநாயகர் சதுர்த்தி விழா நடத்துவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் எனக்கோரப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரின் கோரிக்கைக்கு அரசு வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி, கொரோனாவால் தமிழகத்தில் தினந்தோறும் 6 ஆயிரம் நபர்கள் பாதிக்கப்பட்டு வரும் இந்த சூழலில் மனுதாரர் எவ்வாறு விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் நலதிட்ட நிகழ்ச்சி நடத்த அனுமதி கேட்கிறார், இதில் எவ்வாறு கட்டுப்பாடுகளை நீதிமன்றம் விதிக்க முடியும் என கேள்வி எழுப்பினார்.

எனவே இதுபோன்ற மனுக்களை தாக்கல் செய்து நீதிமன்றத்தின் நேரங்களை வீணடிக்க வேண்டாம், மனுதாரர் தனது திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டும் எனத்தெரிவித்துள்ள நீதிபதி, இல்லை யென்றால் நீதிமன்றம் அபராதம் விதிக்க நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதையடுத்து வழக்கு நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.