டெல்லி: ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு தடை கோரிய வழக்கு விசாரணையை 4 வாரத்துக்கு உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை 2017ம் ஆண்டு தமிழக அரசு அமைத்து உத்தரவிட்டது. ஆணையத்தின் விசாரணை தொடர்ந்து தாமதிக்கப்பட்டு வருகிறது.

கிட்டத்தட்ட 3 ஆண்டுகளை கடந்தும், எந்த முன்னேற்றமும் இல்லை. இந் நிலையில், மருத்துவ நிபுணர்கள் இல்லாத ஆறுமுகசாமி ஆணையத்தின் முன்பாக ஆஜராகி விளக்கம் அளிக்கமுடியாது என்றும், ஆணையம் செயல்பட தடைவிதிக்க வேண்டும் என்றும் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு மனு ஒன்றை தாக்கல் செய்தது.

அதனை விசாரித்த உச்சநீதிமன்றம் ஆணையத்துக்கு இடைக்காலத் தடை விதித்தது. தடையை நீக்கக் கோரி தமிழக அரசு இடைக்கால மனு தாக்கல் செய்ய, அந்த தடையும் நீக்கப்பட்டது.

இந் நிலையில் இன்று உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது உச்சநீதிமன்ற நீதிபதிகளில் ஒருவரான அப்துல் நசீர் வேறு ஒரு வழக்கை விசாரித்தார். இதையடுத்து, அப்பல்லோ மருத்துவமனை தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணையை 4 வாரத்திற்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.