சென்னை

பிரதமர் வீட்டு வசதி திட்ட நிதி உதவியைப் பஞ்சாயத்துத் தலைவர்கள் கொள்ளை அடித்துள்ளதாக வழக்குகள் பதிவகி உள்ளன.

வீடற்ற மக்களின் வீட்டு வசதிக்காக பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் நிதி உதவி அளிக்கப்பட்டு வருகிறது. இதில் முதல் முதலாக வீடு வாங்கும் குடும்பத்தினருக்கு உதவித் தொகையாக ரூ. 2 லட்சம் வரை வழங்கப்படுகிறது. இந்த நிதி உதவி பெறும் நபர்களில் கிராம வாசிகள் கிராம பஞ்சாயத்துத் தலைவரால் அடையாளம்  காணப்பட்டு ஊர்ஜிதம் செய்ய வேண்டும் என்பது விதிமுறையாகும்.

ஆனால் இந்த உதவித் திட்டத்தில் ஏராளமான பணம்  கொள்ளை அடிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வந்தன. அதையொட்டி நடந்த விசாரணையில் பல கிராம பஞ்சாயத்துத் தலைவர்களே இந்த கொள்ளையை நடத்தி உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. நாகபட்டினத்தைச் சேர்ந்த ஒரு பஞ்சாயத்துத் தலைவர் இறந்து போன தன் தந்தைக்கு நிதி உதவித் தொகை சிபாரிசு செய்து அந்த தொகையைத் தாமே எடுத்துக் கொண்டுள்ளார்.

அதைத் தவிரத் தனது இரண்டாம் மனைவி மற்றும் மருமகளுக்கு தலா ரூ.7000 நிதி உதவிக்குச் சிபாரிசு செய்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு இவர்கள் இருவருக்கும் வீடு கட்ட வெள்ள நிவாரணத் தொகை அளித்ததைக் கண்டறிந்த வங்கி அதிகாரி இந்த உதவித் தொகையை நிறுத்தி புகார் அளித்துள்ளார். தற்போது  இந்த பஞ்சாயத்துத் தலைவர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. மேலும் இது போலப் பல புகார்கள் பதியப்பட்டுள்ளன.

தூத்துக்குடி, நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இது போல் வழக்கு பதியப்பட்டுள்ளது. மொத்தம் ரு.40 முதல் 50 கோடி வரை மோசடி நடந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்த திட்டத்தின் படி நிலம் இருந்து வீடுகள் இல்லாத ஏழை மக்களுக்கு அதிக பட்சமாக ரூ.2 லட்சம் உதவித் தொகை அளிக்க வேண்டும் என்றுள்ளது. ஆனால் ஏற்கனவே மாடி வீடுகள் உள்ள பலருக்கு வீடு கட்டாமலே இத்தகைய உதவித் தொகை அளிக்கபட்ட்டுள்ள்தக கூறப்படுகிறது.