பணமதிப்பிழப்புக்கு பின் அரசு ஊழியர்களின் சட்டவிரோத டெபாசிட்!! ஆதாரங்கள் சிக்கியது

டில்லி:

கறுப்பு பணத்திற்கு முடிவு கட்டும் வகையில் புழக்கத்தில் இருந்த ஆயிரம், 500 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று பிரதமர் மோடி கடந்த நவம்பரில் அறிவித்தார். இதற்கு பதிலான புதிய 500 ரூபாய், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்திற்கு வந்தது.

பழைய பணத்தை டெபாசிட் செய்யவும், புதிதாக பணம் எடுக்கவும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. ஆனால் இதையும் மீறி சட்டவிரோதமாக கறுப்பு பணமும் மீண்டும் புதிய ரூபாய் நோட்டுக்களாக மாற்றப்பட்டுவிட்டதாக புகார்கள் எழுந்தது.

பணமதிப்பிழப்பு அறிவிப்புக்கு பின்னர் அரசு ஊழியர்கள் பலர் சட்டவிரோதமான வழிகளில் பணத்தை டெபாசிட் செய்திருப்பதை மத்திய நேரடி வரிவிதிப்பு வாரியம் கண்டுபிடித்துள்ளது.

அரசு ஊழியர்களின் சட்டவிரோத டெபாசிட் தொடர்பாக ஏராளமான தகவல்கள் இந்த வாரியத்திடம் சி க்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அரசு அலுவலகங்களை தவறாக பயன்படுத்தி இந்த டெபாசிட் நடந்திருக்கிறது.

இதற்கான ஆதாரங்களை வாரியம், அந்தந்த துறை தலைமை லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளது. இதன் மீது தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளது.