மதுரையில் போலீஸ் நிலையம் அருகே கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த நபரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை நகரில் நாள் தோறும் தனியாக நடந்து செல்பவர்களை குறிவைத்து பணம்-நகை, செல்போன் பறிப்பு போன்றவை சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது. குறிப்பாக மூதாட்டிகளை குறிவைத்து கொள்ளை கும்பல் இச்செயலில் ஈடுபட்டு வருகிறது. இது தொடர்பாக மதுரை நகரில் உள்ள போலீஸ் நிலையங்களில் தினந்தோறும் புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன. பணம், நகையை பறிகொடுத்தவர்கள் திரும்ப கிடைத்து விடும் என எண்ணி, நாள்தோறும் போலீஸ் நிலையங்களுக்கு சென்று வருகின்றனர். ஆனால் இதுவரை எந்த குற்றவாளியும் கைது செய்யப்பட்டு பொருட்களை மீட்டதாக தெரியவில்லை. போலீசாரும் வாகன சோதனை, ரோந்து என பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தும், சமூக விரோதிகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதனால் பொதுமக்கள் குறிப்பாக பெண்களும், முதியோர்களும் தனியாக வெளியே செல்லவே அச்சப்படுகின்றனர். இத்தகைய சூழலில் தான், தற்போது போலீஸ் நிலையம் அருகே கொள்ளையர்கள் எந்த வித தயக்கமும் இன்றி கைவரிசை காட்டியுள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை பழங்காநத்தம் அருகே உள்ள வசந்தம் காலனியை சேர்ந்தவர் ரமேஷ். இவர்  சுப்பிரமணியபுரம் போலீஸ் நிலையம் எதிரே உள்ள ஜெயம் தியேட்டர் பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் கத்தியை காட்டி மிரட்டி ரமேஷிடம் இருந்த 500 ரூபாயை பறித்துக்கொண்டு தப்பினார்.

இதுகுறித்த புகாரின் பேரில் சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் பழங்காநத்தம் மேலத் தெருவைச் சேர்ந்த அம்மையப்பன் பணம் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.