தனியார் நிறுவனங்களில் சாதி பார்ப்பது சட்டப்படி குற்றமல்ல!: நடிகை கஸ்தூரி பி.எல்.

னியார் நிறுவனத்தில் சாதி பார்ப்பது சட்டப்படி தவறல்ல என்று அதிரடியாக தெரிவித்துள்ளார் நடிகை கஸ்தூரி.

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் இயங்கி வரும் ஏகோர் என்ற மல்டி நேசனல் நிறுவனம், தனது நிறுவன பணியிடங்களுக்கு பிராமணர்கள் மட்டும் என்று குறிப்பிட்டு விலம்பரம் ஒன்றை வெளியிட்டது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

இது குறித்து அந்நிறுவனத்தினர், தங்களது  அலுவலகத்தில் எல்லாரும் வெஜிடேரியன்கள் என்பதால் வெஜிடேரியன்களாக எதிர்பார்ப்பாபதாக தெரிவித்தனர்.

நாம் தொடர்புகொண்டு  பேசியபோது, “பிராமின்ஸ் ஒன்லி என்ற வாசகம் எழுத்துப்பிழையாக வந்துவிட்டது” என்றனர்.

இந்த நிலையில்  தந்தை பெரியார் திராவிடர் கழக தலைவர் கோவை. ராமகிருஷ்ணன், ஏகோர் நிறுவனத்தை எதிர்த்து போராட்டம் நடத்த இருப்பதாக நம்மிடம் தெரிவித்தார்.

இந்த நிலையில் நடிகை கஸ்தூரி தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார்.

அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:

“பொதுவாக என் சமூகவலையில் ஜாதி பேசக்கூடாது என்று நினைப்பவள் நான், ஆனால் சில விஷயங்களை கண்டிப்பாக கடந்துபோக கூடாது.
இன்று இந்த விளம்பரத்தை பார்த்து வாயடைத்து போனேன். இந்த அய்யருங்க இருக்காங்களே, என்ன திமிர் இருக்கவேண்டும்! என்று ஆத்திரமும் அருவருப்பும் வந்தது. இந்த நிறுவனத்தை நடத்தும் அந்த சாதி வெறி பிடித்த ப்ராஹ்மணர்கள் யார் என்று கொஞ்சம் ஆராய்ந்தால், அதிர்ச்சி ! நிறுவனத்தின் உரிமையாளர்கள் ராஜஸ்தானிய ஜாங்கிட் ( விஸ்வகர்மா, அதாவது தச்சர் ) குலத்தினர். தமிழும் இல்லை, அய்யரும் இல்லை ! அட ராமா !

கஸ்தூரி பதிவு

நான் இப்போ என்ன செய்வது? அய்யருங்களை சந்தேகப்பட்ட என் அவசரபுத்தியை நினைத்து வெட்கப்படுவதா? இல்லை என்னை போல் அவசரக்காரர்கள் ஏராளமானோர் இங்குண்டு என்பதை நினைத்து அழுவதா சிரிப்பதா?

இதோடு என் ஆராய்ச்சி முடியவில்லை. வேலைவாய்ப்பில் ஜாதி பாகுபாடு பார்ப்பது சட்டப்படி குற்றமாயிற்றே, இதற்கு விளம்பரம் கொடுத்த அறிவாளிகளுக்கும், பணத்தை வாங்கிக்கொண்டு இப்படி ஒரு விளம்பரத்தை வெளியிட்ட நாளிதழுக்கும் என்ன தண்டனை என்று தேடினேன்- அரசு வேளையில் ஜாதி பார்த்தல் குற்றம் என்பது சட்டம், தனியார் நிறுவனத்துக்கு அப்படி எந்த விதியும் இல்லை !” என்று நடிகை கஸ்தூரி பதிவிட்டுள்ளார்.

நடிகை கஸ்தூரி பி.எல். பட்டம் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.