ஊர் பெயர்களில் தொடரும் ஜாதி.. வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு..

--

சில நாட்களுக்கு முன் தமிழகத்தில் திடீரென பல ஊர்களின் ஆங்கிலப்பெயர்களை தமிழ்ப்பெயர் களுக்கான உச்சரிப்புடன் மாற்றி அறிவிப்பு வெளியிட்டது. ஆனால் பல ஊர்களின் பெயர்களில் உள்ள சாதியின் பெயர்களை நீக்காமல், அவ்வாறு நீக்கச்சொல்லி வலியுறுத்தி வரும் அவ்வூர்களைச் சேர்ந்தோரின் கோரிக்கைகளை கண்டுகொள்ளாமலும் மெத்தனம் காட்டிவருகிறது.

உதாரணமாக, முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக தரும்புரி அருகேயுள்ள சக்கிலிபட்டி எனும் தங்களின் பெயரை மாற்றக்கோரி போராடி வரும் கிராம மக்களின் கோரிக்கை இன்னமும் நிறைவேற்றப்படவேயில்லை. இதனால் அதிருப்தியடைந்த இக்கிராமத்தினர் தங்கள் ஊர்ப்பெயரை ரஷ்ய தலைவர் ஸ்டாலின் மேலுள்ள பற்றினால், “ஸ்டாலின்புரம்” என்று மாற்றக்கோரி போராடி வருகின்றனர். ஆனால் அதனால் எந்த பயனும் விளையவில்லை.

அரசின் அனைத்து தகவல் தொடர்புகளிலும் சக்கிலிபட்டி என்றே குறிப்பிடப்படுகிறது. ஊரின் பெயர்ப்பலகையில் மட்டும் எஸ். பட்டி என்று எழுதப்பட்டுள்ளது. எனினும் இவ்வூரார் தங்களின் அனைத்து தொடர்புகளிலும், அழைப்பிதழ்கள் போன்றவற்றில் ஸ்டாலின்புரம் என்றே குறிப்பிட்டு வருகின்றனர். ஆனால் அரசியல்வாதிகள் நடத்தும் கூட்டங்கள், போராட்டங்கள் மற்றும் ஊர்வல நோட்டீஸ் பேனர்களில் மட்டும் மறக்காமல் ஸ்டாலின்புரம் என்றே அச்சடிக்கின்றனர்.

இது சம்பந்தமாக நீதிமன்றத்தை நாடி, நீதிமன்றமும் 2018, அக்டோபரிலேயே உடனடியாக இவர்களது கோரிக்கைகளை பரிசீலனை வேண்டுமென்றும், 1978-ல் நிறைவேற்றப்பட்ட அரசின் தீர்மானத்தின் அடிப்படையில் ஊர் பெயர்களில் உள்ள சாதிப்பெயரை நீக்க வேண்டும் என்று ஆணையிட்டும் இதுவரை இவ்வியத்தில் கவனம் செலுத்தவில்லை அரசு நிர்வாகம்.

“தரும்புரி மாவட்டத்தில் உள்ளது போலவே மாநிலத்தின் பல பகுதிகளில் பரையபட்டி, கவுண்டம்பட்டி, இருளபட்டி என்று சாதி பெயர்களைத் தாங்கி நிற்கும் ஊர்ப்பெயர்கள் மாற்றத்திற்காக அரசை எதிர்பார்த்து காத்திருக்கின்றன. இதை அரசு நிர்வாகம் உடனடியாக கவனித்து ஆவன செய்வது நல்லது. ஏனெனில் இவைகளெல்லாம் 1950-கள் வாக்கில் இடப்பட்ட காரணப்பெயர்கள் தான்” என்கிறார் மதுரை காமராசர் பல்கலைக்கழக பேராசிரியர் தர்மராஜ்.

இனியாவது அரசு இவ்வியத்தை கையலெடுத்து நடவடிக்கைகள் மேற்கொள்வது நல்லது.

– லெட்சுமி பிரியா