எம்பிஏ சேர்க்கைக்கு கேட் தேர்வு தேவையில்லை: அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் தகவல்

டெல்லி: எம்பிஏ சேர்க்கைக்கு கேட் தேர்வு தேவையில்லை என்று அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலான ஏஐசிடிஇ அறிவித்துள்ளது.

கொரோனா காரணமாக பல நுழைவுத் தேர்வுகள் நடத்த முடியாத நிலை உள்ளது. இளங்கலை தேர்வுகளில் தகுதி பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்களை அனுமதிக்க எம்.பி.ஏ மற்றும் பி.ஜி.டி.எம் படிப்புகளை வழங்கும் வணிகப் பள்ளிகள் மற்றும் நிறுவனங்களுக்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) அனுமதி அளித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து ஏஐசிடிஇ உறுப்பினர் செயலாளர் ராஜீவ் குமார் கூறி இருப்பதாவது: அகில இந்திய தேர்வுகளான CAT, XAT, CMAT, ATMA, MAT, GMAT மற்றும் அந்தந்த மாநிலங்களின் பொதுவான நுழைவுத் தேர்வு ஆகியவை எம்பிஏ அல்லது முதுகலை டிப்ளோமா இன் மேனேஜ்மென்ட் பாடத்தில் சேருவதற்கான தகுதி சோதனைகள் ஆகும்.

பல மாநிலங்களில் கொரோனா வைரஸ் பயம் காரணமாக இந்த நுழைவு தேர்வுகளை நடத்த முடியவில்லை. மேலும் அவை ஒத்திவைக்கப்படுகிறதா அல்லது நடத்தப்படுமா அல்லது ரத்து செய்யப்படுமா என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை.

தற்போதைய சூழ்நிலையில், பிஜிடிஎம் மற்றும் எம்பிஏ நிறுவனங்கள் தகுதிவாய்ந்த தேர்வுகளில் பெறப்பட்ட மதிப்பெண்களின் அடிப்படையில் ஒரு தகுதி பட்டியலை தயாரித்து மாணவர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.

கவுன்சிலிங் மூலம் இடங்களை ஒதுக்கும்போது மாநிலங்களும் இந்த தளர்வை பயன்படுத்தலாம். பிஜிடிஎம் மற்றும் எம்பிஏ நிறுவனங்களுக்கு இந்த தளர்வு 2020-2021 கல்வியாண்டிற்கு மட்டுமே பொருந்தும் என்பதை கவனத்தில் கொள்ளலாம். எதிர்கால கல்வி முறைக்கு ஒரு முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது என்று கூறினார்.