இணையத்தில் பெண் தேடும் இளைஞர்களே ! கொள்ளைக்கும்பல்… எச்சரிக்கை!!

சென்னை

சென்னையை சேர்ந்த ஒரு இளைஞரை திருமணத்துக்கு பெண் பார்க்க வரச் சொல்லி ஒரு கும்பல் கொள்ளை அடித்துள்ளது.

இணைய தளம் மூலம் கொள்ளை அடிப்பது என்பது வங்கி கணக்கு உள்ளிட்டவைகளில் இருந்து திருடுவது என பலரும் என்ணி இருக்கின்றார்கள். ஆனால் அடிதடி, மிரட்டல் மூலம் கொள்ளை அடிப்பவர்களும் தற்போது இணையத்தில் நுழைந்துள்ளனர். அவர்களில் ஒரு கும்பல் நவீன முறையில் கொள்ளையை நடத்தி உள்ளனர்.

சென்னையை சேர்ந்த இளைஞர் காளிசரண் என்பவர் தனக்கு திருமணத்துக்கு பெண் தேவை என இணையதளம் ஒன்றில் தனது தகவல்களை பதிந்துள்ளார். இவரிடம் ஒரு பெண் தொலைபேசி மூலம் பேசி உள்ளார். அப்போது அந்தப் பெண் அவரை தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் பிடித்து விட்டது எனவும் தனது குடும்பத்தினரை சந்தித்து அத்துடன் தன்னை பெண் பார்க்க வருமாறு அழைத்துள்ளர்.

அந்தப் பெண் கொடுத்த முகவரிக்கு காளிசரண் சென்றுள்ளார். அவர் சென்ற இடம் ஒரு சர்வீஸ் அபார்ட்மெண்ட் ஆகும். அந்த இடத்தில் ஒரு பெண்ணும் 43 ஆண்களும் இருந்துள்ளனர். அந்தப் பெண்ணின் உறவினர்கள் என நம்பிய காளிசரண் அந்த இடத்துக்குள் சென்றுள்ளார்.

அவரை சுற்றி வளைத்த அந்த கும்பல் கத்தியை காட்டி காளிசரணிடம் இருந்த நகை, பணம், ஏடிஎம் அட்டை ஆகியவற்றை பிடுங்கிக் கொண்டுள்ளனர். தப்பி ஓட முயன்ற காளிசரணை பிடித்து மிரட்டி அவரது ஏடிஎம் அட்டையின் பின் எண்ணையும் வாங்கிக் கொண்டு அடித்து விரட்டி உள்ளனர்.

இந்த விவரம் குறித்து காளிசரண் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்..