பலாத்கார பேராயரை எதிர்த்த கேரள கன்னியாஸ்திரிக்கு திருச்சபை எச்சரிக்கை

யநாடு

த கோட்பாடுகளுக்கு கிழ்படியவில்லை எனக் கூறி கேரள கன்னியாஸ்திரி லூசி கலப்புராவுக்கு திருச்சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.

கேரள மாநிலம் வயநாட்டில் அமைந்துள்ள ஃபிரான்சிஸ்கன் கிளாரிஸ்ட் திருச்சபையை சேர்ந்தவர் லூசி கலப்புரா. துணிச்சலான பெண்ணான லூசி கேரள அரசு சமீபத்தில் நடத்திய பெண்கள் சுவருக்கு ஆதரவாக தனது முகநூல் பக்கத்தில் பதிவு இட்டிருந்தார். இது மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பல கிறித்துவ சமுதாயத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஜலந்தர் மறை மாவட்ட பேராயர் பிராங்கோ முலக்கல் மீது கன்னியாஸ்திரி ஒருவரால் பலாத்கார புகார் கூறப்பட்டது. அதற்கு காவல்துறை நடவடிக்கை எடுக்காததை கண்டித்து ஐந்து கன்னியாஸ்திரிகள் போராட்டம் நடத்தினார்கள். அதில் முக்கியமானவர் லூசி கலப்புரா என்பது குறிப்பிடத் தக்கது.

தற்போது கன்னியாஸ்திரி லூசிக்கு ஃப்ரான்சிஸ்கன் கிளாரிஸ்ட் திருச்சபை தலைவர் ஆன் ஜோசப் அனுப்பி உள்ள கடிதத்தில், “கடந்த சில வருடங்களாக திருச்சபையின் விதிகளுக்க்கும் மதவாழ்க்கையின் கோட்பாடுகளுக்கும் சகோதரி லூசி கீழ்ப்படியாமல் எதிராக நடந்துக் கொள்கிறார். இது மிகவும் தவறான செய்கை ஆகும்.

சகோதரி லூசி திருச்சபையின் அனுமதி பெறாமல் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்.   அத்துடன் அவர் சொந்தமாக கார்  வாங்கி அதை அவரே ஓட்டி வருவதுடன் வசதியாக வாழ்ந்து வருகிறார்.  இது கிறித்துவ மத கன்னியாஸ்திரிகளின் எளிமையான வாழ்க்கைக்கு எதிரானதாகும்.

ஆகவே அவர் ஆலுவா அசோகபுரத்தில் உள்ள திருச்சபையின் தலைமை அலுவலகத்துக்கு நேரில் வந்து விளக்கம் அளிக்க வேண்டும். அவ்வாறு விளக்கம் அளிக்கவில்லை எனில் அவர் திருச்சபையின் கட்டளையை வேண்டுமென்று மீறியதாக கருதப்படும்; அதற்காக அவர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இன்று காலை 10 மணிக்கு லூசி விளக்கம் அளிக்க திருச்சபை நேரம் அளித்திருந்தது.   ஆனால் அதற்கு லூசி வரவில்லை.   இன்றைய பொது வேலை நிறுத்தம் காரணமாக வாகனங்கள் ஏதும் செல்லவில்லை எனவும் அதனால் அலுவலகத்துக்கு வர முடியவில்லை எனவும் லூசி தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளார்

இந்த கடிதம் குறித்து கருத்து தெரிவித்த சிலர் திருச்சபையின் கடுமையான நடவடிக்கை என்பது பதவி நீக்கம் ஆக இருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.