புதுடெல்லி:
காவிரி மேலான்மை வாரியத்தை 4 வாரங்களுக்குள் அமைக்க உச்ச நீதி மன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டு உள்ளது.
மேலும் நாளை முதல் 6000 கன அடி தண்ணீர் தமிழகத்திற்கு திறந்து விட கர்நாடக அரசுக்கு உச்சநீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.
தமிழகத்திற்கு மேலும் 10 நாட்களுக்கு தண்ணீர் திறக்கவேண்டும் என்று காவிரி மேற்பார்வைக்குழு உத்தரவிட்டும் ஒரு சொட்டு கூட தரமுடியாது என்று கூறி அணைகளில் இருந்து திறந்து விட்ட தண்ணீரை கர்நாடகா நிறுத்திவிட்டது.
பதற்றமான சூழ்நிலைக்கிடையே காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் பிற்பகல்  விசாரணைக்கு வந்தது.
supreme
காவிரி நீர் பங்கீடு தொடர்பாக காவிரி மேற்பார்வைக்குழுக் கூட்டம் நேற்று டெல்லியில் நடந்தது. இதில் செப்டம்பர் 21 முதல் 10 நாட்களுக்கு வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் தமிழகத்திற்கு திறக்க வேண்டும் என காவிரி மேற்பார்வைக்குழு கர்நாடக அரசிற்கு உத்தரவிட்டது. இதனையடுத்து கர்நாடகாவில் மீண்டும் பதற்றம் உருவாகியுள்ளது.
உச்சநீதிமன்ற தீர்ப்பு தமிழகத்திற்கு சாதகமாக இருக்கும் பட்சத்தில் கர்நாடகாவில் மீண்டும் கலவரம் வெடிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. எனவே அதை தடுப்பதற்காக பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கர்நாடகாவில் 21ம் தேதிவரை மதுக்கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பெங்களூருவில் வரும் 25 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு தொடரும் என மாநகர காவல்துறை அறிவித்துள்ளது.
பதற்றம் நிறைந்த மாண்டியா மாவட்டத்தில் 5 தாலுகாக்களில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதோடு அந்த தாலுகாக்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக எமது பெங்களூரு செய்தியாளர் கூறியுள்ளார். கடந்த வாரங்களில் உச்சநீதிமன்ற தீர்ப்பு அறிவிக்கப்பட்ட உடனேயே மாண்டியா மாவட்ட விவசாயிகள்தான் அதிக அளவில் போராட்டத்தில் ஈடுபட்டனர். கன்னட அமைப்பினர் வன்முறையில் ஈடுபடலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாண்டியா மாவட்டத்தில் உள்ள 5 தாலுகாக்களில் 144 தடை உத்தரவும், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.