சென்னை:

காவிரி பிரச்சனையில். தமிழகத்தில் போராடி வரும் மக்களை அமைதி காக்க சொல்லுங்கள் என்று உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, தமிழக வழக்கறிஞரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உச்சநீதிமன்ற உத்தரவுபடி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து, தமிழகம் முழுவதும் 4 நாட்களாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

சாலை மறியல், ரயில் மறியல், விமானம் மறியல், உண்ணா விரதம்  என  பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகிறது. அரசியல் கட்சியினர் மட்டுமின்றி, பொதுமக்கள், மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் போராட்டத்தில் கலந்துகொள்வதால், தமிழகமே ஸ்தம்பித்து உள்ளது.

தமிழகத்தில் நடைபெறும் போராட்டம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், உச்சநீதி மன்றத்தில் வேறொரு வழக்கில் ஆஜரான தமிழக வழக்கறிஞர் உமாபதியிடம், தலைமை நீதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காவிரி பிரச்சினைக்காக  போராடும் தமிழக மக்களை அமைதி காக்கச் சொல்லுங்கள், அவமதிப்பு வழக்கில் விசாரணை நடக்க உள்ள நிலையில் போராட்டம் நடத்துவது ஏன் எனவும்  அவர் கூறி உள்ளார்.