காவிரி நடுவர் மன்றம் கலைப்பு: மத்தியஅரசு அரசாணை வெளியீடு

டில்லி:

காவிரி நீர் தொடர்பான விவகாரத்தில் உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பு வெளியாகி, காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்ட நிலையில், காவிரி நடுவர் மன்றத்தை கலைப்பதாக மத்திய அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.

காவிரி விவகாரத்தில் கடந்த மே மாதம் 18ந்தேதி  உச்சநீதிமன்றம் இறுதி தீர்ப்பு வழங்கியது. அதன்படி காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி ஒழுங்காற்று குழுவை  மத்திய அரசு அமைத்து நடவடிக்கை எடுத்துள்ளது.  இந்த நிலையில், காவிரி நடுவர்மன்றத்தைக் கலைத்து மத்திய அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.

காவிரி விவகாரத்தில் தமிழகம் மற்றும் கர்நாடகா இடையே  தீர்வு காணும் வகையில் கடந்த 1990 ஆம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. சுமார் 28 ஆண்டுகளாக காவிரி நடுவர் மன்றம் இயங்கி வந்தது.  கடந்த 2007 ஆம் ஆண்டு காவிரி விவகாரம் தொடர்பாக இறுதி தீர்ப்பை காவிரி நடுவர் மன்றம் வழங்கியது. இதை  ஏற்க கர்நாடக அரசு மறுத்து வந்தது.

இது தொடர்பான வழக்கில், உச்சநீதி மன்றம் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க உத்தரவிட்டது. உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டதால், காவிரி நடுவர் மன்றம் கலைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் சார்பில் அரசாணையை  வெளியிட்டுள்ளது. அதில் காவிரி நடுவர் நீதிமன்றம் கலைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காவிரி நடுவர் மன்றத்தை கலைத்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அரசாணை