சென்னை: காவிரி ஆணையத்தின் தன்னாட்சி அதிகாரம் பறிபோனது விவசாயிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காவிரி விவகாரத்தில் 4 மாநிலத்தின் நதி நீர் பங்கீடு பிரச்னையை தீர்க்கும் விதமாக காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைக்குமாறு 2018ம் ஆண்டு பிப். 16ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. அதன் பின்னர் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை உருவாக்கி அதற்கான அரசாணையையும் வெளியிட்டது.

இதை தொடர்ந்து காவிரி ஆணையம், காவிரி ஒழுங்காற்று குழு என 2 ஆக பிரித்து தனித்தனியாக 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.பிறகு காவிரி ஆணையத்தின் 5வது கூட்டம் ஒரு ஆண்டு இழுபறிக்கு பிறகு கடந்த பிப்ரவரி மாதம் 25ம் தேதி டெல்லியில் மத்திய நீர்வள ஆணைய தலைவர் ராஜேந்திர குமார் ஜெயின் தலைமையில் நடந்தது. இதில், தமிழகம், கர்நாடகா உட்பட 4 மாநில முதலமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

இந் நிலையில் தற்போது மத்திய நீர் வள அமைச்சகம் தரப்பில் அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. காவிரி நீர் மேலாண்ைம ஆணையத்தை மத்திய ஜல்சக்தி துறையின் கீழ் இணைத்து உத்தரவிடப்பட்டு உள்ளது. இதன் மூலம் காவிரி மேலாண்மை ஆணையத்தின் அதிகாரம் பறிபோகும் சூழல் உருவாகியுள்ளது.

காவிரி மேலாண்மை ஆணையம் என்பது தன்னாட்சி அதிகாரம் கொண்டது. அதில், மத்திய அரசு கூட தலையிட முடியாது என்று உச்ச நீதிமன்ற தீர்ப்பில் மிக தெளிவாக கூறப்பட்டுள்ளது. ஆணையத்தின் முழு அதிகாரமும் அதன் தலைவருக்கே உண்டு என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது இப்படி இருக்க, தற்போது மத்திய நீர்வள அமைச்சகத்தின் கீழ் காவிரி மேலாண்மை ஆணையத்தை இணைத்துள்ளதால் மாநிலங்களின் கோரிக்கை அனைத்தும் பறிபோகும் சூழல் உருவாகியுள்ளது. காவிரி ஆணையம் மட்டுமின்றி, கோதாவரி, கிருஷ்ணா நதி உட்பட 30 நதி நீர் பங்கீட்டு ஆணையங்கள் இணைக்கப்பட்டுள்ளது.

மத்திய நீர்வள அமைச்சகம் எனக்கூறப்படும் ஜல் சக்தித்துறை அமைச்சகம் என்கிற பெயரில் மாற்றப்பட்டுள்ளதால், இந்த நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந் நிலையில் காவிரி ஆணையம் தன்னாட்சி அதிகாரம் பறிபோனதால் விவசாயிகள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக விவசாயிகளின் 25 ஆண்டு கால போராட்டத்தின் விளைவாக தான் காவிரி ஆணையம் அமைக்கப்பட்டு தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்பட்டு வருகிறது.