டில்லி:

காவிரி விவகாரம் தொடர்பான வழக்கில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் காலம் தாழ்த்திய மத்திய அரசுக்கு, காவிரி நதிநீர் பங்கீடு குறித்த வரைவுத் திட்டத்தை தாக்கல் செய்ய உச்சநீதி மன்றம் உத்தரவிட்டது. ஆனால், மத்திய அரசு அதற்கும் கால அவகாசம் கேட்டு இழுத்தடித்து வருவது  தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

காவிரி நீர் பங்கீடு வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் 16ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு கூறியது. அதன்படி,  6 வாரங்களுக்குள் தீர்ப்பை நடைமுறைப்படுத்தி காவிரி மேலாண்மை வாரியம்  மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால், உச்சநீதி மன்றம் தீர்ப்பை மதிக்காமல், கெடு முடியும் நாளில், ஸ்கீம் என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்டு உச்சநீதி மன்றத்தை நாடியது.

இதற்கு தமிழக்ததில் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், மத்திய அரசு மீது தமிழக அரசு சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடரப்பட்டது.

இவற்றை விசாரித்த உச்ச நீதிமன்றம் காவிரி விவகாரத்தில் வரைவு திட்டத்தை மே 3-ம் தேதி தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால், 3-ம் தேதி விசாரணையின்போது, கர்நாடக தேர்தலை காரணம் காட்டி,  மத்திய அரசு வரைவு அறிக்கையை தாக்கல் செய்யாமல் மீண்டும் இழுத்தடித்து.

இதையடுத்து, காவிரி வரைவு அறிக்கை எந்த அளவிற்கு தயாரிக்கப்பட்டுள்ளது என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், வரைவுத் திட்டத்தை உருவாக்க இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை மே 8-ம் தேதி பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். மேலும், ஏப்ரல், மே மாதத்திற்கான 4 டிஎம்சி தண்ணீரைத் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிட்டனர்.

ஆனால், அணைகளில் போதிய நீர் இல்லை என்றும், தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க வாய்ப்பில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் கர்நாடகா நேற்று அறிக்கை தாக்கல் செய்தது. இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி 4 டிஎம்சி நீரை கர்நாடகா திறக்க உத்தரவிடக் கோரி தமிழக அரசு தரப்பிலும் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதற்கிடையே நேற்றே மத்திய அரசு தரப்பிலும் உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் காவிரி வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.