காவிரி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் இன்று முதல் மீண்டும் விசாரணை!

டில்லி,

காவிரி நதிநீர் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்றுமுதல் மீண்டும் விசாரணை தொடங்குகிறது.

காவிரி நடுவர் மன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக, தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் மேல்முறையீடு செய்து இருந்தன.

இவற்றை விசாரிக்க அரசியல் சட்ட ரீதியாக சுப்ரீம் கோர்ட்டுக்கு அதிகாரம் உள்ளது என, கடந்த ஆண்டு டிசம்பர், 9ம் தேதி சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்தது.

நடுவர் மன்றம் பிறப்பித்த தீர்ப்பின்படி காவிரியில் தண்ணீர் திறந்து விடாத கர்நாடக அரசு,

2,480 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என, தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்துள்ளது.
இப்படி நிலுவையில் உள்ள காவிரி பிரச்னை தொடர்பான வழக்குகளை சுப்ரீம் கோர்ட், இன்று முதல் தொடர்ந்து விசாரிக்க உள்ளது.

நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான, நீதிபதிகள் அமித்வா ராய் மற்றும் கான்வில்கார் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த வழக்குகளை விசாரிக்க உள்ளது.

காவிரி நடுவர்மன்ற இறுதி தீர்ப்பை எதிர்க்கும் மேல்-முறையீட்டு வழக்கில் பிப்ரவரி 7-ந் தேதி முதல் தினமும் விசாரணை நடைபெறும் என்றும் அன்று தொடங்கி 3 வார காலத்துக்கு தினமும் பகல் 2 மணிக்கு இந்த வழக்கு விசாரணை நடைபெறும் என நீதிபதிகள் அறிவித்தனர்.

இந்த வழக்கில் இறுதி முடிவு எடுக்கும் வரை, தமிழகத்துக்கு கர்நாடகம் வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.