டில்லி:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது.

இன்றைய வழக்கில் கர்நாடக தேர்தலை மனதில்கொண்டு மேலும் 10 நாட்கள் அவகாசம் கேட்டு மத்திய அரசு வழக்கறிஞர் வாதாடினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசு, காவிரி விவகாரத்தில், “சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி தீர்ப்பை அமல்படுத்த முடியாது என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு சொல்வதெல்லாம் ஒரு பதிலா? என கடுமையாக சாடியது.

இந்த விவகாரத்தில் மத்திய அரசை நம்பினால் தண்ணீர் கிடைக்காது. அவர்களை நம்பி நாங்கள் காத்து இருந்தால் எங்களுக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடைக்காது. தேர்தலை காரணம் காட்டி அரசு மக்களை வஞ்சிக்கிறது என்றும் மத்தியஅரசுக்கு எதிராக கடுமையான குற்றத்தை சாட்டியது.

இரு தரப்பு வாதத்தையும் கேட்ட உச்சநீதி மன்றம், ஏற்கனவே கடந்த விசாரணையின்போது கூறிய 4 டிஎம்சி தண்ணீர் குறித்து வாயை திறக்காமல் மவுனியாகவே இருந்தது.

மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று,  வழக்கை வரும் 14ந்தேதிக்கு ஒத்தி வைத்த நீதிபதிகள், அன்று  காவிரி வரைவு திட்ட அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.

காவிரியில் தண்ணீர் திறக்க கடந்தமுறை உத்தரவிட்ட உச்சநீதி மன்றம், அதை செயல்படுத்த கடுமையான உத்தரவுகளை பிறப்பிக்கும் என எதிர்பார்த்த நிலையில், அதுகுறித்து கண்டுக்காமல் மத்திய அரசுக்கு உச்சநீதி மன்றம் கெடு விதித்திருப்பது வியப்பளிக்கிறது. இதன் காரணமாக  தமிழக விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

மததிய அரசின் தமிழக விரோத போக்கிற்கு தமிழக விவசாய அமைப்புகள், எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக எம்.பி. இலகணேசன், தமிழகத்திற்கான காவிரி நீர் கிடைக்கும் என்பதில் உறுதியாக இருப்பதாகவும், தேர்தல் நேரத்தில் ஒரு முதலமைச்சருடன் பிரதமர் பேசுவதற்கு உகந்த சூழ்நிலை இருக்காது என்றும் கூறி உள்ளார்.