காவிரி ஆணையமா? காவிரி மேலாண்மை வாரியமா? நாளை உச்சநீதி மன்றம் தீர்ப்பு

டில்லி:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி  தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் நாளை உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்க இருப்பதாக அறிவித்து உள்ளது.

இந்த வழக்கில் மத்திய அரசு காவிரி நதிநீர் தொடர்பான வரைவு திட்டத்தை செயல்படுத்த அமைக்கப்படும் அமைப்புக்கு காவிரி ஆணையம் என்று பெயரிட்டுள்ளது. ஆனால், தமிழக அரசு காவிரி மேலாண்மை வாரியம் என்றுதான் பெயரிடப்பட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது.

காவிரி தொடர்பாக கடந்த 12ந்தேதி உச்சநீதி மன்றத்தில் நடைபெற்ற  விசாரணையின்போது, மத்திய அரசு  காவிரி வரைவு திட்டத்தை தாக்கல் செய்தது. அதுகுறித்து பதில் தெரிவிக்க மாநில அரசுகளுக்கு  உச்சநீதி மன்றம் அறிவுறுத்தியிருந்தது.

அதன்படி நேற்றைய விசாரணையின்போது மாநில அரசுகள் சார்பாக கருத்துக்கள் முன் வைக்கப்பட்டன. தமிழக அரசு சார்பில்   மத்திய அரசு உருவாக்கும் அமைப்பிற்கு காவிரி மேலாண்மை வாரியம் என பெயரிட வேண்டும் என்றும், அந்த  அமைப்பின் தலைமையிடத்தை பெங்களூரில் இருந்து டில்லிக்கு  மாற்ற வேண்டும் என்றும் கூறியிருந்தது. மேலும், இதுகுறித்து  உடனடியாக அரசிதழில் வெளியிட்டு அமல்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கையை வைத்தது.

இதுகுறித்த விசாரணையின்போது, காவிரி மேலாண்மை வாரியம் என்று பெயரிட மத்திய அரசு சம்மதம் தெரிவித்ததாக கூறப்பட்டது.

இந்நிலையில் காவிரி வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இன்றைய விசாரணையின்போது  காவிரி திருத்திய வரைவு திட்டத்தை மத்திய அரசு  தாக்கல் செய்தது.   மத்திய அரசு தலைமை வழக்கறிஞர் வேணுகோபால் இந்த வரைவு திட்டத்தை தாக்கல் செய்தார்.

இந்த விவகாரத்தில் நேற்றைய விசாரணையின்போது, நதிநீர் குறித்து பிரச்சினை ஏற்பட்டால்  மத்திய அரசிடம் முறையிட வேண்டும் என்ற விதியை நீக்க வேண்டும் என்று உச்சநீதிமனறம் உத்தரவிட்டு இருந்தது. அதைத் தொடர்ந்து அந்த விதி நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும் காவிரி மேலாண்மை வாரியத்தை காவிரி ஆணையம் என்று மத்திய அரசு மாற்றியது.அதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. காவிரி மேலாண்மை வாரியம் என்ற பெயரிலேயே அமைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியது.

ஆனால், இதுகுறித்து விளக்கம் அளித்த மத்தியஅரசு வழக்கறிஞர்,  மேலாண்மை வாரியத்தை விட அதிக அதிகாரம் ஆணையத்துக்கு உண்டு. அதனால்தன்   ஆணையம் என பெயர் மாற்றப்பட்டுள்ளது. ஆணையம் என்று பெயர் மாற்றியதால் அதிகாரம் ஏதும் குறையாது என்று மத்திய அரசு கூறினார்.  ஆணையத்தின் முடிவே இறுதியானது என்றும் வரைவுத் திட்டத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

அதேவேளையில், அணையில் உள்ள நீர் இருப்பை தெரிவிக்க கர்நாடகம் மற்றும் கேரளம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தண்ணீரை திறந்துவிடும் அதிகாரம் தங்களுக்கே உண்டு என்றும், நீரை திறக்கும் அதிகாரம் மாநில அரசிடமே இருக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் கர்நாடகம் கூறி மனு தாக்கல் செய்துள்ளது.

இதற்கு தமிழக அரசு சார்பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.  அப்போது காவிரி வரைவு திட்டம் தொடர்பான அமைப்புக்கு காவிரி நீர் மேலாண்மை வாரியம் என்று பெயரிட கர்நாடகா சார்பில் கூறப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசு காவிரி மேலாண்மை வாரியம் என்றே பெயரிடப்பட வேண்டும் என்றும், இதுகுறித்து  மத்தியஅரசு கர்நாடக அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் என்று கோரி உள்ளது.

இதையடுத்து வழக்கின் விசாரணை காரசார விவாதத்துடன் முடிவடைந்தது.  இந்நிலையில்  இந்த வழக்கில் நாளை  மாலை 4 மணிக்கு தீர்ப்பு அளிக்கப்படும் என்று உச்சநீதி மன்றம்  அறிவித்துள்ளது. மேலும் நாளை தீர்ப்பு வழங்காவிடில் மே 22 அல்லது 23 ம் தேதிகளில் தீர்ப்பளிக்கப்படும் என்றும் கூறியுள்ளது.

நாளைa தீர்ப்பில் காவிரி ஆணையம் என்ற  பெயர் வைக்கப்படுமா அல்லது காவிரி மேலாண்மை வாரியம் என்ற பெயர் வைக்கப்பட இருக்கிறதா என்பது தெரிய வரும்.