காவிரி வரைவு செயல் திட்டம்: முதல்வர் எடப்பாடி தலைமையில் ஆலோசனை

சென்னை :

காவிரி விவகாரம் தொடர்பான வழக்கு நாளை மீண்டும் உச்சநீதி மன்றத்தில் விசாரணைக்கு வர உள்ள நிலையில் நேற்று மத்திய அரசு தாக்கல் செய்த காவிரி வரைவு செயல்திட்டம் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் சென்னை கோட்டையில் ஆலோசனை நடைபெற்றது.

காவிரி வழக்கில் உச்சநீதி மன்ற தீர்ப்பை செயல்படுத்தாமல்  மத்திய அரசு இழுத்தடித்து வந்த நிலையில், நேற்றைய (14ந்தேதி) விசாரணையின்போது, காவிரி வரைவு செயல் திட்ட அறிக்கையை தாக்கல் செய்தது.

இந்த அறிக்கையின் நகல் தமிழகம், கர்நாடகம், கேரளம், புதுச்சேரி உள்பட 4 மாநிலங்களுக்கு கொடுத்த உச்சநீதி மன்றம், இதுகுறித்து 16ந்தேதி (நாளை) நடைபெற உள்ள விசாரணையின்போது பதில் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்நிலையில் தலைமைச் செயலகத்தில்முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் தமிழகத்திற்கான சாதக, பாதக அம்சங்கள் குறித்து விரிவான ஆலோசனை நடைபெற்றது. நாளை நடைபெற உள்ள காவிரி வழக்கு தொடர்பான விசாரணையில், தமிழக அரசு சார்பில் தனது கருத்தை தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.