1kavri
பெங்களூரு:
காவிரி குடும்பம் மீண்டும் கர்நாடகத்தில் தொடங்க இருப்பதாக தகவல்கள் கூறுகிறது. இதன் மூலம் காவிரியில் தண்ணீர் திறந்துவிடும் பிரச்சினைக்கு முடிவு கிடைக்குமா?
காவிரி பிரச்னைக்கு தீர்வு காண  2003ம் ஆண்டு காவிரி குடும்பம் என்ற அமைப்பை  தமிழக – கர்நாடக விவசாயிகள் ஒருங்கிணைந்து தொடங்கினர். அதேபோல மீண்டும் காவிரி குடும்பம் அமைப்பை உருவாக்க, கர்நாடக விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.
இந்த குடும்ப அமைப்பில், அரசியல் கட்சியினர் தவிர்த்து, தமிழக – கர்நாடக விவசாயிகள்,  பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் ஆகியோரை, இரு மாநிலங்களிலுமிருந்து தேர்வு செய்து, காவிரி குடும்பம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.
காவிரி நதி நீர் பிரச்னைக்கு தீர்வு காண இவர்களே அணைகளுக்கு சென்று நீர் இருப்பை பார்வையிடுவது, மழை காலத்துக்கேற்ப எந்தெந்த பயிர் வகைகளை பயிரிடுவது ஆகியவற்றை தீர்மானித்து  விவசாயிகளிடம் கலந்து ஆலோசித்து ஆவன செய்தனர். இதன் வாயிலாக காவிரி தண்ணீரை பகிர்ந்து கொள்வதாகவும் முடிவு செய்தனர்.
இவ்வாறு செய்தால், இரு மாநிலங்களுக்கும் இடையே வன்முறைகள் நடப்பதையும் தவிர்க்கவும், இரு மாநில விவசாயிகளும் நல்லெண்ணத்துடன் பழகவும், நீரின் இருப்புக்கேற்க விவசாயங்களை மேற்கொள்ளவும் முடியும் என்ற நல்ல நோக்கத்தில் உருவான காவிரி குடும்பம் அரசியல்வாதிகளின் தலையீடுகளில் அர்த்தம்ற்றதாகி போனது.
தற்போது காவிரி பிரச்சினைக்காக நடைபெறும்  போராட்டங்களால், அரசியல் கட்சிகள் சந்தர்ப்பத்துக்கேற்ப நாடகமாடுவதை உணர்ந்த கர்நாடக விவசாயிகள், மீண்டும் காவிரி குடும்பம் அமைப்பை உருவாக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதுகுறித்து, சர்வோதயா கர்நாடகா கட்சி எம்.எல்.ஏ.,வும், கர்நாடகா கரும்பு விவசாயிகள் சங்க தலைவருமான புட்டணய்யா கூறியதாவது:
இரு மாநில விவசாய பிரதிநிதிகளும் இணைந்து உருவாக்கிய காவிரி குடும்பம் அமைப்பு, சிறப்பாக செயல்பட்டு வந்தவரை எந்த பிரச்சினையும் எழவில்லை. இரு மாநில பிரதிநிதிகளும் நேரில் சென்று ஆய்வு செய்து, நிலைமையை அறிந்து செயல்பட்டனர்.
 
மீண்டும் அந்த அமைப்பை துவங்குவது குறித்து, முதல்வர் சித்தராமையாவுடன் பேசியபோது சாதகமான பதில் கிடைத்தது. விரைவில் தமிழக பிரதிநிதிகளை சந்தித்து, ஆதரவு திரட்டுவோம். அரசியல் கட்சிகள் தரும் தகவல்களை வைத்தே போராட்டங்கள் துவங்குகின்றன.
இரு மாநில விவசாய பிரதிநிதிகளும் நேரில் சென்று பார்ப்பதுடன், தேவையான ஆலோசனைகளை தெரிவிப்பதன் மூலம், போராட்டங்களை தவிர்க்கலாம். இரு மாநிலங்களுக்கும் இடையே சுமுக உறவும் நீடிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.