ரூ.6,941 கோடி மதிப்பில் காவிரி-வைகை-குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டம்: முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்

புதுக்கோட்டை: காவிரி-வைகை-குண்டாறு நதிகள் இணைப்புத் திட்ட முதல் கட்ட பணிகளுக்கான அடிக்கல்லை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று நாட்டினார்.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே குன்னத்தூரில் ரூ.6,941 கோடி மதிப்பில் இந்த திட்டத்தின் முதல் கட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது. அதில் முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.

ரூ.3,384 கோடி மதிப்பில் உள்கட்டமைப்புகளை புனரமைக்கும் பணிகளுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார். வெள்ளக் காலங்களில் காவிரி உபரி நீர் கரூர் மாவட்டம், மாயனூர் தடுப்பணையிலிருந்து திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களின் வறண்ட பகுதிகள் வழியாக குண்டாற்றுடன் இணைப்பதன் மூலமாக இப்பகுதி மக்களின் 100 ஆண்டு கால கனவு நிறைவேற்றப்படுகிறது.

இதன்மூலம் திருச்சி, கரூர், புதுக்கோட்டை,ராமநாதபுரம், சிவகங்கை,  விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் 69,962 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறும். கரூர், திருச்சி, புதுக்கோட்டையில் நிலத்தடி நீர்மட்டமும் உயரும்.